"அமெரிக்க அதிபரை இப்படித்தான் தேர்வு செய்கிறார்கள்" - ஒரு விரிவான ரிப்போர்ட் இதோ

Asianet News Tamil  
Published : Nov 02, 2016, 04:59 AM ISTUpdated : Sep 19, 2018, 12:59 AM IST
"அமெரிக்க அதிபரை இப்படித்தான் தேர்வு செய்கிறார்கள்" - ஒரு விரிவான ரிப்போர்ட் இதோ

சுருக்கம்

உலகிலேயே ராணுவம், பொருளாதாரம், தொழில்நுட்பத்தில் வல்லரசான அமெரிக்காவில் அதிபர் தேர்தல் இம்மாதம் 8-ந்தேதி நடக்க இருக்கிறது. புதிய அதிபரை பார்க்க உலகமே ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறது.

உலகின் வலிமை மிகுந்த தலைவராகக் கருதப்படுபவர் அமெரிக்க அதிபர். அவர் அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கோ, அமைச்சரவைக்கோ கட்டுப்பட்டவர் அல்ல. எந்தப் பிரச்னையிலும் தன்னிச்சையாக முடிவெடுக்க முடிவெடுக்கும் ‘வீட்டோ’ அதிகாரம் கொடுக்கப்பட்டு இருப்பதால் தான் உலகத்தின் ‘பெரிய அண்ணணாக’ வலம் வருகிறார். 

8-ந்தேதி தேர்தல்

இப்படிப்பட்ட அதிபரை தேர்வு ெசய்யும், தேர்தல் வரும் 8-ந் தேதி நடக்க இருக்கிறது. இதனால் அந்த நாட்டில் ஆளும் ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இடையே உச்சக்கட்ட பிரசாரம் அரங்கேறி வருகிறது.

ஆனால் உண்மையில் அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசு நாட்டில், தேர்தல் நடைமுறை, இந்தியா போன்று ஜனநாயக முறையைப் போல் அல்லாமல், சற்று வித்தியாசமாகவே நடக்கிறது.

வேட்பாளர்கள்

இந்த முறை அதிபர் பதவிக்காக ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை எதிர்த்து தொழிலதிபர்டொனால்ட் டிரம்ப்பும் களத்தில் இருக்கின்றார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான நடைமுறை நம் நாட்டு தேர்தல் முறையில் இருந்து வேறுபட்டது. அமெரிக்க தேர்தல் நடக்கும் முறை குறித்து பார்ப்பதற்கு முன், அங்குள்ள மாநிலங்கள், பிரதிநிதிகள் குறித்து தெரிந்து கொள்வது அவசியம். 

50 மாநிலங்கள்

அமெரிக்காவில் மொத்தம் 50 மாநிலங்கள் உள்ளன. ஒரு மாநிலத்துக்கு 2 செனட்டர்கள்(தேர்வாளர்கள்) வீதம் 100 செனட்டர்கள் இருப்பார்கள். இந்த எண்ணிக்கை மாறாது. 

50 மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் 435 பிரதிநிதிகள் . இது போக தலைநகர் வாஷிங்டன் அமைந்துள்்ள கொலம்பியா மாவட்டத்துக்கு 3 பிரதிநிதிகளைச் சேர்த்து மொத்தம் 538 தேர்வாளர்கள். 

இவர்கள்தான் அதிபரையும் , துணை அதிபரையும் தேர்வு செய்வார்கள். மக்கள் நேரடியாக தேர்வு செய்யமாட்டார்கள். 

முக்கிய தகுதிகள்..

அமெரிக்க அதிபராக மூன்று தகுதிகள் அவசியம் இருக்க வேண்டும். அவை பிறக்கும்போது அமெரிக்க குடிமகனாக இருந்திருக்க வேண்டும்(2) 35 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும். (3) அமெரிக்காவில் குறைந்தது 14 வருடங்கள் வாழ்ந்திருக்க வேண்டும். இந்த மூன்றும் இருந்தால் யார் வேண்டுமானாலும் அதிபர் பதவிக்கு போட்டி போடலாம். 

இரு கட்சிகள்: 

அமெரிக்காவில் இரண்டு கட்சிகள் பிரதானமாகும். ஒன்று ஜனநாயகக் கட்சி(டெமாக்ரடிக்)  மற்றொன்று குடியரசுக் கட்சி(ரிபப்ளிகன்). இதில் ஜனநாயகக் கட்சிக்கு கழுதையும், குடியரசுக் கட்சிக்கு யானையும் சின்னங்களாகும்.

இந்த இரு கட்சிகளையும் தாண்டி சுதந்திரா கட்சி(லிபரட்டேரியன்), கிரீன் பார்ட்டி என்ற கட்சிகளும் உண்டு. ஆனால் இந்த கட்சிகளில் இருந்து பெரும்பாலும் வேட்பாளர்கள் அதிகமாக வருவதில்லை. 

இருவகை தேர்தல் பிரசாரம்:

தேர்தல் நடப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இரு கட்டங்களைக் கொண்டது. முதலாவது கட்சிகள் நடத்தும் வேட்பாளர் தேர்தலுக்கான பிரசாரம். இரண்டாவது, வேட்பாளர்கள் முறைப்படி அறிவிக்கப்பட்டதும் இரு கட்சிகளின் அதிபர் வேட்பாளர்களுக்கு இடையே நடக்கும் ‘போட்டி பிரசாரம்’.

 

வேட்பாளர் தேர்தல்

வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் கட்சி உறுப்பினர்களும், மக்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். வேட்பாளர்களைத் தேர்வு செய்ய கட்சிகளின் மாநிலப் பிரிவுகள் நடத்தும் தேர்தல்களே வேட்பாளர் தேர்தல் எனப்படுகின்றன. 

பிரதிநிதிகள்

ஒரு கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இந்தத் தேர்தலில் ஒவ்வொரு மாநிலமாகப் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டுவார்கள். வேட்பாளர் தேர்தல்கள் ‘காகஸ்’ மற்றும் ‘பிரைமரி’ என்ற இரு பிரிவுகளைக் கொண்டது. ஒரு மாநிலத்தில் ஒரு கட்சி ‘காகஸ்’ முறையில் தேர்தலை நடத்தினாலும் மற்றொரு கட்சி ‘பிரைமரி’ முறையில் தேர்தலை நடத்தலாம். அது அந்தந்த கட்சிகளைச் சார்ந்து அமையும். 

ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு மாநிலத்துக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் வாக்கை ஒதுக்கி இருக்கின்றன. இந்த எண்ணிக்கை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். அதாவது மக்கள்தொகை அடிப்படையில் இந்த பிரதிநிதிகள் எண்ணிக்கை மாறுபடும். 

ஜனநாயகக் கட்சிக்கு ஒட்டுமொத்தம் 4,766 பிரதிநிதிகள் வாக்கு இருக்கிறது. வேட்பாளர் தேர்தலில் வெற்றிபெற்று அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட  வேண்டுமானால்  ஒருவர் 2,384 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றாக வேண்டும்.

அதேபோல, குடியரசுக் கட்சியைப் பொறுத்தவரை மொத்த பிரதிநிதிகள் வாக்குகள் 2,472. வெற்றி பெறுவதற்கு 1237 வாக்குகள் தேவை. 

வேட்பாளர் தேர்வு

அனைத்து மாநிலங்களிலும் வேட்பாளர் தேர்தல்கள் முடிந்ததும் கட்சிகளின் தேசியக் கூட்டம் நடக்கும். இந்த கூட்டத்தில் அதிபர் வேட்பாளரை பிரதிநிதிகள் தேர்வு செய்து அதிகாரப் பூர்வமாக அறிவிப்பார்கள். அதன்பின்.  அவர்கள் இருவரும் தனித்தனியாக பிரசாரம் செய்வார்கள். இறுதியாக, ஒரே மேடையில் தோன்றி விவாதம் நடத்துவார்கள். தேர்தலுக்கு முன்பாக குறைந்தது 3 முறை இந்த விவாதம் நடக்கும்.

220 ஆண்டு

அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது 220 ஆண்டுகால பாரம்பரியம் கொண்டது. ஒவ்வொரு லீப் ஆண்டும் நவம்பர் முதல் திங்கள்கிழமைக்கு அடுத்து வரும் செவ்வாய்க்கிழமையில் (இந்த ஆண்டு நவம்பர் 8) அதிபர் தேர்தல் நடக்கிறது. 

அரசியல் சட்டப்படி தேர்வாளர் குழு மூலமாகவே அதிபர் தேர்வு செய்யப்படுகிறார். எனினும் இந்தத் தேர்வாளர் குழுவினர் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதால் அதிபர் வேட்பாளருக்கு மாநில வாரியாக மக்கள் செல்வாக்கு இருந்தாக வேண்டும். 

பாதிக்கு மேல்....

வாக்குச் சீட்டில் அதிபர் வேட்பாளரின் பெயருக்குப் பதிலாக அவரது கட்சியின் தேர்வாளர் குழுவினரின் பெயர்களோ அல்லது சுருக்கமாக கட்சிகளின் பெயரோ இருக்கும். வாக்காளர்கள் அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு மாநிலத்தின் பாதிக்கும் மேற்பட்ட வாக்குகளை  வேட்பாளர் ஒருவர் பெற்று விட்டால், அந்த மாநிலத்தின் அனைத்துத் தேர்வாளர் வாக்குகளையும் அவரே பெற்றுவிடுவார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நடைமுறையை உற்று நோக்கினால் மாநில ரீதியில்தான் அதிபரின் வெற்றி கணக்கிடப்படுகிறதே தவிர, நாட்டின் ஒட்டுமொத்த வாக்குகளின் அடிப்படையில் அல்ல.

435 பிரதிநிதிகள்

மக்கள் தொகைக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேர்வாளர்கள்  கணக்கிடப்படுகிறது. 50 மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் 435 பிரதிநிதிகள் (ரெப்ரசெண்டேடிவ்ஸ்). 

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிரதிநிதிகள்(அதாவது எம்.பி.) எண்ணிக்கை மற்றும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாறாத எண்ணிக்கையில் 2 செனட்டர்கள். இரண்டையும் கூட்டினால் வருவது அந்த மாநிலத்தின் தேர்வாளர்கள் வாக்காகும். (எலக்டோரல் வோட்ஸ்). 

உதாரணமாக கலிபோர்னியா மாநிலத்தின் மக்கள் தொகை 3.88 கோடி. இங்கு 53 பிரதிநிதிகள் மற்றும் 2 செனட்டர்கள் வாக்குகள் உண்டு. அதாவது, அதிபரைத் தேர்வு செய்யும் 55 தேர்வாளர்கள் வாக்குகள் இங்கு இருக்கிறது என அர்த்தம்.

538 தேர்வாகள் வாக்கு 

இதுபோல் 50 மாநிலங்களுக்கும் 435 தேர்வாளர்கள் மற்றும் 100 செனட்டர்கள் என மொத்தம் 535 தேர்வாளர்கள் வாக்கு. கொலம்பியா மாவட்டத்துக்கான 3 பேரை சேர்த்தால் மொத்தம் 538 தேர்வாளர்கள் வாக்கு. மொத்தமுள்ள 538 தேர்வாளர் வாக்குகளில், ஒரு வேட்பாளர் குறைந்தபட்சம் 270 வாக்குகளைப் பெற்றால் அவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாக வாக்குகள் கணக்கிடப்பட்டு, அந்த மாநிலத்தில் யார் அதிக வாக்குகள் பெறும் வேட்பாளரோ அவருக்கு அந்த மாநிலத்தின் தேர்வாளர்கள் வாக்கு(எலக்டோரல் வோட்ஸ்) மொத்தமும் அளிக்கப்படும். 

அதாவது , கலிபோர்னியா மாநிலத்தில் டெமாக்ரடிக் வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்றால் அவருக்கு 55 தேர்வாளர்கள் வாக்குகளும் அளிக்கப்படும். . இப்படியே எல்லா மாநிலங்களிலும் வெற்றி பெறும் வேட்பாளருக்கு அந்தந்த மாநிலத்தின் எலக்டோரல் வோட்ஸ் சேர்க்கப்படும். 

தேர்வாளர்கள் கூட்டம்:

மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களின் முடிவுகள் வெளியானதுமே அதிபர் யார் என்பது ஏறக்குறைய முடிவாகிவிடும். ஏனென்றால், எந்த வேட்பாளருக்கு எத்தனை தேர்வாளர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும்.

தேர்தல் முடிந்த பின், வரும் டிசம்பர் மாதத்தின் இரண்டாவது புதன்கிழமைக்கு அடுத்துவரும் திங்கள்கிழமை அன்று ஒவ்வொரு மாநிலத் தலைநகரங்களில் தேர்வாளர்கள்  கூடுவார்கள். அனைத்து மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் தேர்வாளர்கள் கூட்டங்கள் நடக்கும். அங்கு அதிபரைத் தேர்வு செய்வார்கள். 

அதிபராக தேர்வு செய்யப்படுபவர் தேர்தல் முடிந்தபின் 2017-ம் ஆண்டு ஜனவரி 20-ந்தேதி  பதவி ஏற்றுக்கொள்வார்.

PREV
click me!

Recommended Stories

உலகில் முதல்முறை! சோமாலிலாந்தை தனி நாடாக அங்கீகரித்த இஸ்ரேல்.. கொதிக்கும் அரபு நாடுகள்!
பச்சை பொய்.. இந்தியா குறித்து வங்கதேச போலீஸ் புகாரை தவிடுபொடியாக்கிய BSF!