இந்த நடவடிக்கை சீனா-அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மிக மோசமாக பாதிக்கும் செயல், இது சீனா மற்றும் அமெரிக்க மக்களுக்கு இடையிலான நட்பின் பாலத்தை உடைக்கிறது என வாங் வென் கூறியுள்ளார்.
டெக்சாஸ் மற்றும் ஹூஸ்டனில் உள்ள சீன துணை தூதரகங்களை மூட அமெரிக்க அரசாங்கம் உத்தரவிட்டிருப்பதன் பின்னணியில் தீங்கிழைக்கும் அவதூறு இருப்பதாக சீனா ஆதங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் ராஜதந்திர விதிமுறைகளை மீறி ஒருபோதும் சீனா செயல்பட்டதில்லை என தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகத்தில் நீடித்து வரும் பனிப்போர், கொரோனா வைரஸ் தொற்று, ஹாங்காங் விவகாரம், உய்குர் முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல், தென்சீனக்கடல் விவகாரம், உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது.
இந்நிலையில், சீனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்கா முன்னெடுத்து வருகிறது. அதன் ஓருபகுதியாக ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை மூட அமெரிக்கா நேற்று அதிரடியாக உத்தரவிட்டது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா தனது கண்டனத்தை வலுவாக பதிவு செய்துள்ள நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் மீண்டும் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் ஒரு சீன தூதரகத்தை மூடுவதாக தெரிவித்துள்ளதுடன், அதற்கான உத்தரவையும் சீனாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறியுள்ளது. இது குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில ஆண்டுகளாக சீன தூதரகம் அமெரிக்காவில் உளவு பார்த்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதுதவிர சட்டவிரோத விஷயங்களில் அது ஈடுபட்டு வருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கைகளை அமெரிக்காவால் ஒருபோதும் தாங்கிக்கொள்ள முடியாது. எனவே ஹூஸ்டனில் உள்ள தூதரகம் மூடப்பட்ட நிலையில், டெக்ஸாஸில் உள்ள தூதரகத்தையும் மூட அமெரிக்கா முடிவு செய்துள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், சீன தூதரகத்தை மூடுவதற்கான உத்தரவு சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகளை மீறுவதாகும்.
இந்த நடவடிக்கை சீனா-அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மிக மோசமாக பாதிக்கும் செயல், இது சீனா மற்றும் அமெரிக்க மக்களுக்கு இடையிலான நட்பின் பாலத்தை உடைக்கிறது என வாங் வென் கூறியுள்ளார். அமெரிக்கா சீனாவிற்கு இடையேயான 6 அதிகாரப்பூர்வ தொடர்புகளில் ஒன்றான தூதரகத்தை மூடுவதற்கான உத்தரவு, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளுக்கிடையில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, சீனாவிற்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்கா அதிபர் தீவிரம் காட்டி வருகிறார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு நிச்சயம் பெய்ஜிங் தகுந்த பதில் அளிக்கும் என்றார். மேலும் தூதரகத்தை மூடுவதற்கான காரணம் குறித்து அமெரிக்கா வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் டெக்சாஸ் மற்றும் ஹூஸ்டன் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் அமெரிக்க தரவுகளை திருட முயன்றதாக விளக்கம் தெரிவிக்கப்பட்டதை முற்றிலுமாக மறுத்த வாங் வென்பின், இந்த கூற்றில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை எனவும் இது முற்றிலும் தீங்கிழைக்கும் அவதூறு என்றும் கூறியுள்ளார்.