
அமெரிக்க அதிபர் டிரம்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் டோஜ் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைவராக இருந்த எலான் மஸ்க் அதிக அளவில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முந்தைய குற்றச்சாட்டுகளுக்கு தற்போது சில ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரச்சாரத்தின் போது, கெட்டமைன், எக்ஸ்டஸி, மேஜிக் மஷ்ரூம் போன்ற பல்வேறு போதைப்பொருட்களை மஸ்க் பயன்படுத்தியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மஸ்க் 20 டோஸ்கள் கொண்ட போதை மருந்துகளை எப்போதும் வைத்திருந்ததாகவும், தொடர்ச்சியான போதைப்பொருள் பயன்பாடு அவரது உடல்நலத்தை, குறிப்பாக சிறுநீர்ப்பையை மோசமாக பாதித்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது. தேர்தல் நேரத்தில் மஸ்க்கின் போதைப்பொருள் பயன்பாடு கட்டுக்கடங்காமல் போனதாகவும் அறிக்கை கூறுகிறது.
செய்தி வெளியான சில மணி நேரங்களுக்குள், ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மஸ்க் ஆகியோர் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். அரசாங்க செயல்திறன் துறையிலிருந்து மஸ்க் விலகுவதற்கான பிரியாவிடை விழாவின் போது இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
ட்ரம்ப் பேசும்போது மஸ்க்கின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. மஸ்க் போதைப்பொருள் பயன்படுத்தியதாக வீடியோவின் கீழ் பலர் கருத்து தெரிவித்தனர். மஸ்க், X இல் ஒரு பதிவில், "தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், நான் போதைப்பொருட்களை எடுத்துக் கொள்ளவில்லை. நியூயார்க் டைம்ஸ் பொய் சொல்லிக்கொண்டிருந்தது" என்று கூறினார். "சில ஆண்டுகளுக்கு முன்பு நான் 'மருந்து' கெட்டமைனை முயற்சித்தேன், X இல் அப்படிச் சொன்னேன், எனவே இது செய்தி கூட அல்ல.
இது இருண்ட மன நிலையிலிருந்து வெளியேற உதவுகிறது. ஆனால் அதன் பிறகு அதை எடுத்துக்கொள்ளவில்லை," என்று அவர் மேலும் கூறினார். வெள்ளிக்கிழமை ஓவல் அலுவலகத்தில் டிரம்புடன் பிரியாவிடை நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, போதைப்பொருள் பயன்பாடு குறித்த கேள்வியை மஸ்க் முதலில் தவிர்த்துவிட்டார். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி, பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வதை மேற்பார்வையிட்ட அரசாங்க செயல்திறன் துறையின் (DOGE) தலைமை பதவியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.