சிறைச்சாலையில் மோதலை தடுக்க முடியாமல் திணறல். 2,000 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய அரசு முடிவு!

By manimegalai aFirst Published Oct 2, 2021, 12:38 PM IST
Highlights

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் பெண்கள், வயதானோர், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் பாதிக்கப்பட்டோரில் 2,000 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

தென்அமெரிக்க நாடான ஈகுவடாரின் குயாகு சிறைச்சாலையில் 2 தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற மோதல் அந்நாட்டையே உலுக்கியது. போதைப் பொருள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட கொடூர வழக்கில் கைது செய்யப்படுபவர்கள் மட்டும் அந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வெளியில் இருப்பதை போலவே சிறைச்சாலைக்குள்ளும் தொழில் போட்டியால் அடிக்கடி கலவரம் ஏற்படுவது வழக்கம். இரண்டு நாட்களுக்கு முன்னர் சிறைச்சாலைக்குள் வெடித்த கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகளின் கண்காணிப்பு பணிகளில் போதிய அளவு அதிகாரிகள் நியமிக்கப்படாததே கலவரம் வெடிக்க காரணம் என்று கூறப்படுகிறது. ஈகுவடாரில் ஒட்டுமொத்தமாக 39 ஆயிரம் கைதிகள் சிறைச்சாலைகளில் உள்ளனர். இவர்களை கண்காணிக்க அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுவதால் இரண்டாயிரம் பேரை விடுதலை செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

அந்தவகையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் பெண்கள், வயதானோர், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் பாதிக்கப்பட்டோரில் 2 ஆயிரம் பேரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. கைதிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டால் மோதல்களை தடுக்க முடியும் என்று ஈகுவடார் அரசு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

click me!