
பூமியின் காலநிலை மாற்றத்தின் விளைவு குறித்த புதிய ஆய்வறிக்கை கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. விஞ்ஞானிகள் அஞ்சியதைவிட காலநிலை மாற்றம் அதிவேகமாகத் தீவிரமடைந்து வருவதாக இந்த அறிக்கை கூறுகிறது.
BioScience இதழில் வெளியிடப்பட்ட, ஓரிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தின் (Oregon State University) தலைமையிலான சர்வதேச ஆய்வாளர்கள் குழு ஆறாவது வருடாந்திர "காலநிலையின் நிலை (State of the Climate)" அறிக்கையை வெளியிட்டுள்ளது. காலநிலை மாற்றத்தின் 34 முக்கிய அறிகுறிகளில் 22 இப்போது உச்சத்தில் இருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இதனால், பூமி காலநிலை குழப்பத்தை நோக்கி விரைந்து செல்கிறது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அபாயத்தின் விளிம்பில் பூமி
உயர்ந்து வரும் உலகளாவிய வெப்பநிலை முதல், சாதனை அளவை எட்டியுள்ள பசுமை இல்ல வாயுக்கள் வரை, இந்த அறிக்கை பூமியானது மனிதகுலத்திற்கும் இயற்கை அமைப்புகளுக்கும் பேரழிவு தரும் விளைவுகளுடன் ஒரு "அடிப்படையில் வேறுபட்ட கிரகத்தை" நோக்கிச் செல்வதாக எச்சரிக்கிறது.
கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு உமிழ்வுகள், புதைபடிவ எரிபொருள் நுகர்வு மற்றும் கடல் வெப்பநிலை போன்ற முக்கிய குறியீடுகள் அனைத்தும் 2025ஆம் ஆண்டில் முன் எப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளன.
அதே வேளையில், பனிப்பாறைகள், பல்லுயிர் பெருக்கம் தொடர்ந்து வேகமாகக் குறைந்து வருகின்றன.
"இப்போது காலநிலை மாற்றம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது – நேரம் விரைவாக கடந்துகொண்டிருக்கிறது" என்று போட்ஸ்டாம் காலநிலை தாக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ஜோஹன் ராக்ஸ்ட்ராம் எச்சரிக்கிறார்.
காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட பேரழிவுகளின் அதிகரித்து வரும் தாக்கத்தை ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். டெக்சாஸ் மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம், லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத் தீ, ஐரோப்பாவில் பதிவான வெப்ப அலைகள் போன்றவை இதனை உணர்த்துகின்றன என்றும் ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள்.
2024 ஆம் ஆண்டு குறைந்தது 1,25,000 ஆண்டுகளில் மிக வெப்பமான ஆண்டாக இருந்தது, மேலும் 2025 ஆம் ஆண்டு அதை மிஞ்சும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய காலநிலையை ஒழுங்குபடுத்தும் முக்கிய கடல் நீரோட்டமான அட்லாண்டிக் மெரிடியானல் ஓவர்டர்னிங் சர்குலேஷன் (AMOC) பலவீனமடைவது, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் உறைபனி குளிர்காலம் ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
இந்த அபாயகரமான போக்குகள் இருந்தபோதிலும், விஞ்ஞானிகள் செயல்பட இன்னும் தாமதமாகவில்லை என்று வலியுறுத்துகின்றனர்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அவசரமாக விரிவுபடுத்துதல், மீத்தேன் உமிழ்வைக் குறைக்க தாவர அடிப்படையிலான உணவு முறைக்கு மாறுதல், பெரிய அளவிலான வன மறுசீரமைப்பு போன்ற உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கின்றனர்.
"மனிதகுலம்தான் சுற்றுச்சூழலை அதிகப்படியாக பயன்படுத்திக்கொள்கிறது" என்று இந்த அறிக்கையின் இணை முன்னணி ஆசிரியர் கிறிஸ்டோபர் வுல்ஃப் தெரிவித்துள்ளார். "பூமியின் வளங்களை பயன்படுத்தும் வேகம் அவை மீண்டும் உருவாக்கப்படும் வேகத்தைவிட மந்தமாக உள்ளது” எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
உடனடி மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இந்த தீவிர காலநிலை நெருக்கடி விரைவில் மீள முடியாத நிலைக்குச் சென்றுவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.