47வது அமெரிக்க அதிபராக பதவியேற்றார் டொனால்ட் டிரம்ப்! தெற்கு எல்லையில் அவசரநிலை பிரகடனம்!

By SG Balan  |  First Published Jan 20, 2025, 10:50 PM IST

Donald Trump sworn in: டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கலவரத்திற்குப் பிறகு, கேபிடல் கட்டிடத்தில் டிரம்ப் பதவியேற்றார். ஜே.டி.வான்ஸ் துணை அதிபராகப் பதவியேற்றுக்கொண்டார்.


அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் திங்களன்று பதவியேற்றார். இரண்டாவது முறையாக அவர் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டிரம்ப்புடன் ஜே.டி.வான்ஸ் துணை அதிபராகப் பதவியேற்றுக்கொண்டார்.

உறைபனி வெப்பநிலை காரணமாக 40 ஆண்டுகளில் முதல் முறையாக அரங்கத்திற்குள் பதவியேற்பு விழா நடைபெற்றது.  78 வயதான டிரம்ப், ஒரு தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் மீண்டும் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

Latest Videos

ட்ரம்ப் தான் ஆட்சிக்கு வந்தவுடன் நிர்வாக அதிகாரத்தை விரிவுபடுத்துவது, மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவது, அரசியல் எதிரிகளை குறிவைப்பது மற்றும் அமெரிக்காவின் உலகளாவிய பங்கை மறுவரையறை செய்வது போன்ற வாக்குறுதிகளை அளித்திருந்தார்.

அதன்படி, பதவியேற்றவுடன் ஆற்றிய சிறப்புரையில், முதல் உத்தரவாக அமெரிக்காவின் தெற்கு எல்லையில் தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்துவதாக அறிவித்தார். எல்லையில் ஆயுதமேந்திய துருப்புக்களை நிலைநிறுத்தவும், மெக்சிகோவில் இருந்து, சட்டவிரோதமாக புகலிடம் தேடி வருபவர்கள் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று கூறினார்.

ஜியோ காயின்! கிரிப்டோ கரன்சி சந்தையில் நுழையும் ரிலையன்ஸ்!

ஆற்றல் அவசரநிலையையும் ட்ரம்ப் அறிவித்துள்ளார். மின்சார வாகனங்கள் கட்டாயம் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் மக்கள் தாங்கள் விரும்பும் வாகனங்களை பயன்படுத்தலாம் என்றும் ட்ரம்ப் அறிவித்தார். தனது ஆட்சியில் பாலின சமத்துவம் உறுதிபடுத்தப்படும் என்ற அவர், அமெரிக்காவில் ஆண், பெண் என்ற இரண்டு பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். மெக்சிகோ வளைகுடா இனி அமெரிக்க வளைகுடா என்று அழைக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது. அசாத்தியமானது என்று எதுவும் இல்லை. அமெரிக்க அசாத்தியமானவற்றை செய்துகாட்டுவதில் சிறந்து விளங்குகிறது. அமெரிக்கா இதுவரை காணாத அளவுக்கு வெற்றிகளைப் பெறப்போகிறது எனவும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்காவில் நிலவும் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு முடிவு கட்டப்படும் என்றும் பேச்சுரிமைக்கான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படுகிறது என்றும் அறிவித்தார். அமைதியை நிலைநாட்டுவதற்காகப் பாடுபடுவேன் என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

பதவியேற்பு விழாவை முன்னிட்டு, டிரம்ப் மற்றும் மனைவி மெலனியா டிரம்ப் இருவரும் முந்தைய தினமே வெள்ளை மாளிகைக்கு வந்தனர். 46வது அதிபரான ஜோ பிடனும் அவரது மனைவியான ஜில் பிடன் அவர்களை வரவேற்றனர்.

அதிபராகப் பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்பிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நண்பர் டிரம்ப்புடன் மீண்டும் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நீங்களும் லட்சாதிபதி ஆகலாம்! வெறும் 500 ரூபாயில் SIP முதலீட்டை ஆரம்பிங்க!

click me!