இனி பொறுக்கவே முடியாது.. அமெரிக்காவில் இந்தியர் படுகொலைக்கு டிரம்ப் கண்டனம்

Published : Sep 15, 2025, 05:53 PM IST
Donald Trump reacts to Indian man beheading in Dallas

சுருக்கம்

டல்லாஸில் இந்திய வம்சாவளி உணவக மேலாளர் நாகமல்லையா தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குடும்பத்தினர் கண் முன்னே நடந்ததாக கூறப்படுகிறது. அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் பைடனின் குடியேற்றக் கொள்கைகளைக் கண்டித்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாகமல்லையா (50) என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு மனைவி மற்றும் 18 வயது மகன் உள்ளனர்.

கடந்த 10-ஆம் தேதி, யோர்டானிஸ் கோபோஸ் மார்டினெஸ் (37) என்ற நபரால் நாகமல்லையா தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூரமான சம்பவம் அவரது குடும்பத்தினர் கண்ணெதிரேயே நடந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நாகமல்லையாவின் குடும்பத்தினருக்கு உதவும் வகையில், பொதுமக்களிடம் இருந்து 3.2 லட்சம் டாலர் நிதி திரட்டப்பட்டுள்ளது.

கொலை செய்த கோபோஸ் மார்டினெஸ் கியூபா நாட்டைச் சேர்ந்தவர் என்றும், அவர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவர் ஏற்கனவே ஒருமுறை கைது செய்யப்பட்டதாகவும், ஆனால் அவரது நாடுகடத்தலை கியூபா ஏற்க மறுத்ததால் கடந்த ஜனவரி மாதம் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டொனால்டு டிரம்ப் கண்டனம்:

இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், முன்னாள் அதிபர் ஜோ பைடனின் குடியேற்றக் கொள்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது சமூக வலைதளப் பதிவில், "டல்லாஸ் நகரில் மிகவும் மரியாதையுடன் வாழ்ந்து வந்த நாகமல்லையா, அவரது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் கொடூரமாக தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொலை செய்தவர் கியூபாவில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர். அந்த நபர் அமெரிக்காவில் இருந்திருக்கவே கூடாது.

கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நபர் ஏற்கனவே திருட்டு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூரமான குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, அவரது சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். ஆனால் இதுபோன்ற ஒரு மோசமான குற்றவாளியை ஏற்க கியூபா மறுத்துவிட்டது.

எனவே, திறமையற்ற முன்னாள் அதிபர் ஜோ பைடனின் மோசமான குடியேற்றக் கொள்கையால் அந்த நபர் மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளார். சட்டவிரோதமாக குடியேறிய குற்றவாளிகளிடம் மென்மையாக நடந்து கொள்ளும் வழக்கம் இனி முடிவுக்கு வரும்" என்று கடுமையாக சாடியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
நண்பேன்டா.. ரஷ்ய அதிபர் புடினை விமான நிலையத்துக்கே சென்று வரவேற்ற பிரதமர் மோடி!