சீனா மீது அமெரிக்கா 104% வரி விதித்துள்ளது. டிரம்ப் விதித்த கெடு முடிந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் உலக வர்த்தகத்தில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது.
சீனா மீது கூடுதலாக 50 சதவீத வரி விதிக்கப்படும் என டொனால்டு டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், வரி அதிகரிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதன் மூலம் சீனா மீதான அமெரிக்காவின் வரி விகிதம் 104 சதவீதமாக அதிகரித்து இதுவரை இல்லாத உச்சத்தை அடைந்துள்ளது.
அமெரிக்கப் பொருட்கள் மீது விதித்த 34 சதவீத பதில் வரியை திரும்பப் பெற சீனாவுக்கு டிரம்ப் 24 மணிநேர அவகாசம் அளித்திருந்தார். தவறினால் சீனப் பொருட்கள் மீது 104 சதவீத வரி விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், வெள்ளை மாளிகை சீனா மீதான 104% வரி விதிப்பு இன்றே நடைமுறைக்கு வருகிறது எனக் கூறியுள்ளது. இந்த அறிவிப்பை சில மணிநேரங்களுக்குள் டொனால்டு டிரம்பும் அங்கீகரித்துள்ளார்.
ஆசியா-ஐரோப்பாவில் பங்குச் சந்தை சரிவு.. முட்டு கொடுக்கும் டிரம்ப்.. எல்லாமே போச்சா?
கடந்த மாதம் வரை அமெரிக்கா சீனா மீது 10 சதவீத வரி விதித்து வந்தது. அமெரிக்கப் பொருட்கள் மீது அதிக வரி விதிக்கும் நாடு எனச் சீனாவை விமர்சித்த டிரம்ப், அமெரிக்கப் பொருளாதாரத்திலிருந்து பில்லியன் கணக்கான டாலர்களை கொள்ளையடித்து வருவதாகவும் சாடினார். இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் சீனா, இந்தியா உள்பட பல நாடுகள் மீதான பதில் வரி குறித்து அறிவித்தார். பிற நாடுகள் அமெரிக்காவிடம் இருந்து வசூலித்த வரியில் பாதியளவு வரியை அமெரிக்கா மற்ற நாடுகளிடம் வசூலிக்கும் என்றார். சீனாவைப் பொறுத்தவரை 34% பதில் வரி விதிக்கப்பட்டது. இதனால், சீனா மீதான அமெரிக்காவின் வரி 44 சதவீதமாக உயர்ந்தது.
ஏப்ரல் 2ஆம் தேதி பதில் வரிகளை அறிவித்த அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, தொடர்ச்சியான வர்த்தக பற்றாக்குறைகள் காரணமாக பாதுகாப்பு கவலைகள் காரணமாக, அமெரிக்கா அனைத்து நாடுகளுக்கும் 10 சதவீதம் அடிப்படை வரியை விதிக்கிறது என்றார்.
தற்போது, சீனாவிற்கு மட்டும் கூடுதலாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், சீனா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு 104% ஆகக் கூடியிருக்கிறது. ஒரு வாரத்திற்குள் 10% வரியிலிருந்து 100 சதவீதத்துக்கும் அதிகமாக வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், டிரம்ப் இன்னும் சீனாவுடன் சமரசம் செய்துகொள்ள தயாராக இருக்கிறார். தனது ட்ரூத் சமூக வலைத்தளப் பதிவில், "சீனாவும் ஒரு ஒப்பந்தத்தை செய்ய விரும்புகிறது. ஆனால் அதை எப்படித் தொடங்குவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களின் அழைப்புக்காக நாங்கள் காத்திருக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
13,000 ஆண்டுகளுக்கு முன் அழிந்துபோன ஓநாயை உயிர்ப்பித்து விஞ்ஞானிகள் சாதனை!
முன்னதாக, சீனாவின் பழிவாங்கும் நடவடிக்கையை வாபஸ் பெற டிரம்ப் அளித்த இறுதி எச்சரிக்கைக்கு சீனா பதிலளித்தது. டிரம்ப் தங்களை மிரட்டி பணிய வைக்க முயற்சி செய்வதாக சீனா சாடியது.
"சீனாவிற்கு எதிரான வரிகளை அதிகரிப்பதாக அமெரிக்கா அச்சுறுத்துவது தவறுக்கு மேல் ஒரு தவறு செய்வதாகும். அமெரிக்காவின் மிரட்டல் அணுகுமுறையை இது மீண்டும் ஒரு முறை அம்பலப்படுத்தியுள்ளது. அமெரிக்கா தனது வழியில் செல்ல வற்புறுத்தினால், சீனா இறுதிவரை போராடும்" என்று சீனாவின் வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
இரண்டு பெரிய பொருளாதாரம் கொண்ட இவ்விரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போரின் மத்தியில், உலகம் முழுவதும் நிச்சயமற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு உலகளாவிய சந்தைகள் ஏற்கெனவே மிகப்பெரிய சரிவைச் சந்தித்திருப்பதால், இந்த மோதல் சர்வதேச வர்த்தகம் தொடர்பான கவலைகளை அதிகரித்துள்ளன.
தனித்து விடப்பட்ட ஈரான் அமெரிக்காவிடம் சரணடைந்ததா? அணு ஆயுத பேச்சுக்கு சம்மதம்!!