அமெரிக்காவுடன் அணு ஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்ப் இதை உறுதி செய்துள்ளார், பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க உள்ளது.
Iran nuclear deal with US: அமெரிக்காவுடன் அணு ஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது. இதை அதிபர் டொனால்ட் டிரம்பும் உறுதி செய்து இருக்கிறார்.
ஈரான், அமெரிக்கா அணு ஆயுத பேச்சுவார்த்தை:
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்கள்கிழமை இரவு சமூக ஊடகங்களில் "மறைமுக" பேச்சுவார்த்தைகள் சனிக்கிழமை நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கிற்கான அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப், அப்பாஸ் அராக்சி சந்திப்பு நடக்கும் என்றும் இந்த பேச்சுவார்த்தையில் ஓமான் மத்தியஸ்தராக இருக்கும் என்று ஈரான் நாட்டு ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.
அமெரிக்காவை ஈரான் தாக்குமா?
இதற்கு முன்னதாக அணு ஆயுத ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்து போடவில்லை என்றால், டெஹ்ரானை அமெரிக்கா தாக்கும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்து இருந்தார். இதற்கு முன் யாரும் பார்க்காத அளவிற்கு ஈரான் மீது வெடிகுண்டுகள் வீசப்படும் என்று டிரம்ப் தெரிவித்து இருந்தார். முன்னதாக ஈரானும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தது. அமெரிக்கா தாக்கினால் ஈரான் பதிலடி கொடுக்கும் என்று டெஹ்ரான் எச்சரிக்கை விடுத்தது. ஈரானில் இருந்து அமெரிக்காவை தாக்கும் அளவிற்கு அணு ஆயுத ஏவுகணைகளை ஈரான் வைத்திருப்பதாகவும் செய்தி வெளியானது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு , டிரம்ப் சந்திப்பு:
இந்த சூழலில்தான், திங்கள் கிழமை வெள்ளை மாளிகையில் டிரம்ப்பை சந்தித்தார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. இவர்களது சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு டிரம்ப் பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில், ''ஈரானுடன் நேரடி பேச்சவார்த்தைநடக்கும். ஏற்கனவே பேச்சுவார்த்தை துவங்கிவிட்டது. என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்'' என்று டிரம்ப் தெரிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து தனது பேச்சில், ''ஈரான் தனது அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் ராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்தால், அது "பெரும் ஆபத்தில்" சிக்கிவிடும். மேலும் டெஹ்ரானிடம் "அணு ஆயுதங்கள் இருக்க முடியாது" என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.
அணுகுண்டு முதல் ஏவுகணை வரை: ஈரானின் திறன் என்ன? உலகம் ஏன் கவலைப்படுகிறது?
இஸ்ரேல் அழுத்தம் காரணமா?
கடந்தாண்டு ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருந்தது. முக்கியமாக ராணுவ தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்து இருந்தது. இத்துடன், ஈரானை முடித்துக் கட்டுவதற்கு இதுதான் சரியான தருணம் என்று இஸ்ரேலும் கருதி வருகிறது. தற்போது உலக நாடுகளுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டு வரும் டிரம்ப்புக்கு ஈரானுடன் மோதுவதற்கு விருப்பம் இல்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், இஸ்ரேலின் அழுத்தத்தினால் டிரம்ப் இந்த முடிவு எடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அயத்துல்லா சையத் அலி உசைனி காமெனி:
கடந்த மாதம் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா சையத் அலி உசைனி காமெனிக்கு எழுதிய கடிதத்தில், இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்கும் என்று நம்புவதாக டிரம்ப் கூறி இருந்தார். ஆனால், இதையடுத்து பேசி இருந்த ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி நேரடி பேச்சுவார்த்தை அர்த்தமற்றது என்று தெரிவித்து இருந்தார். ஆனால், இன்று நேரடி பேச்சுவார்த்தை நடக்கும் என்று அவரே தெரிவித்து இருக்கிறார்.
டிரம்புக்கு பதிலடி கொடுக்க ஈரான் ஆயத்தம்; ஏவுகணைகளுடன் தயாராகி வரும் பதுங்கு குழிகள்!!
ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதித்த டிரம்ப்:
கடந்த 2015-ஆம் ஆண்டு ஈரான் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா இடையே அணு ஆயுத தடை ஒப்பந்தம் ஏற்பட்டது. நடப்பாண்டில் வரும் அக்டோபர் மாதம் வரை இந்த ஒப்பந்தம் அமலில் இருக்கும். இந்த நிலையில் தான் மீண்டும் அணு ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா அழைப்பு விடுத்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈரான் மீது இருந்த பொருளாதார தடைகள் நீக்கப்பட்டன. இதையடுத்து, மேற்கு ஆசியாவில் சக்தி வாய்ந்த நாடாக ஈரான் பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென இந்த ஒப்பந்தத்தில் குறை இருப்பதாகக் கூறி, 2018ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தத்தில் இருந்து டிரம்ப் வெளியேறினார். மீண்டும் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தார்.
தனித்து விடப்பட்ட ஈரான்; விரட்டியடிக்கப்பட்ட சிரியா தலைவர்:
ஈரானுக்கு தற்போது மேற்கு ஆசியாவிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏமனில் இருக்கும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. செங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்துகளுக்கு எதிரான ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு பதிலடியாக அமெரிக்கா, ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியது. இது ஒரு பக்கம் நடக்க லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டது. மேற்கு ஆசியாவில் தங்களுக்கு என்று ஆதரவாக இருந்த சிரியாவின் அதிபர் பஷார் அல் அசாத்தும் நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டார். இது ஈரானுக்கு மட்டுமின்றி சிரியாவின் நட்பு நாடான ரஷ்யாவுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த நிலையில்தான் ஈரானும் வழியில்லாமல் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டுள்ளது.