H1-B விசா பெற்ற வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஆதரவாக செய்லபடும் அமைப்புகள் அமெரிக்க அரசு கிரீன் கார்டு பெறுவதற்கான விதிகளை தளர்த்தி இருப்பதைப் பாராட்டியுள்ளன.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ஜூன் 21ஆம் தேதி அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். இந்த பயணத்தின் முக்கிய நிகழ்வாக ஜூன் 22ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க அரசு கிரீன் கார்டு பெறுவது தொடர்பான விதிமுறைகளைத் தளர்த்தியுள்ளது. பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தை முன்னிட்டு வந்துள்ள இந்த அறிவிப்பு இந்தியர்களுக்கு அதிக அளவில் பயன் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. வெளிநாடுகளைச் சேர்ந்தர்கள் நிரந்தரமாக அமெரிக்க குடிமக்களாக பதிவுசெய்துகொள்ள கிரீன் கார்டு பயன்படுகிறது. அந்நாட்டின் சட்டப்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.40 லட்சம் பேர் கிரீன் கார்டு பெறுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் மொத்த கிரீன் கார்டுகளில் அதிகபட்சமாக 7 சதவீதம் மட்டுமே ஒரு குறிப்பிட்ட நாட்டை சேர்ந்தவர்களுக்குக் கொடுக்கப்படும். இதைத் தவிர இன்னும் பல விதிமுறைகளைக்கு உட்பட்டுதான் கிரீன் கார்டு பெற்று அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்கும் அனுமதியைப் பெற முடியும்.
இந்நிலையில், கிரீன் கார்டு அப்ளை செய்வதற்கான நடைமுறையில் அமெரிக்க அரசு புதிய தளர்வை அறிவித்துள்ளது. இதனால், ஏற்கெனவே அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களில் கிரீன் கார்டு பெற விண்ணப்பித்த பல்லாயிரக் கணக்கானவர்கள் பயன்பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.
"அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக பணிபுரியும் வாய்ப்பை உறுதி செய்வதற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க நகர்வு ஆகும்" என்று புலம்பெயர்ந்தோர் உரிமைகளுக்கான வழக்கறிஞர் அஜய் பூடோரியா கூறியுள்ளார். கோவிட் தொற்றைத் தொடர்ந்து வந்த வேலை இழப்பின் காரணமாக தங்கள் சொந்த நாட்டிற்கு இடம்பெயர வேண்டிய சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு இந்த ஏற்பாடு முக்கியமானது என்றும் பூடோரியா தெரிவித்துள்ளார்.
பணிநீக்கம் செய்யப்பட்ட H1-B விசா தொழிலாளர்களுக்காக வாதிடும் FIIDS, USCIS ஆகிய அமைப்புகள் அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கையைப் பாராட்டியுள்ளன.