வலுக்கும் வன்முறை... வெடிக்கும் போராட்டங்கள்... இலங்கையில் ஊரடங்கு நீட்டிப்பு!!

By Narendran S  |  First Published May 10, 2022, 9:57 PM IST

இலங்கை முழுவதும் போராட்டங்கள், வன்முறைகள் தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் ஊரடங்கை மே 12 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 


இலங்கை முழுவதும் போராட்டங்கள், வன்முறைகள் தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் ஊரடங்கை மே 12 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் நாட்டில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. பொருட்களின் விலை உச்சத்தை தொட்டது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசை பதவி விலக வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

இந்தப் போராட்டம் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வரும் நிலையில் இலங்கையில் மீண்டும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த சில வாரங்களாக அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என மக்கள் வீதியில் இறங்கி போராடி வந்தனர். இந்த நிலையில் இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே போராட்டகரர்களின் அழுத்தத்திற்கு பணிந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இந்த நிலையில் கொழும்பில் உள்ள ராஜபக்சே கட்சி அலுவலகத்துக்கு கிளர்ச்சியாளர்கள் தீ வைத்தனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் ஆளும்கட்சியின் எம்.பி  ஒருவர் உயிரிழந்தார்.

இலங்கை தலைநகர் கொழும்புவை தொடர்ந்து பல்வேறு நகரங்களில் கலவரம் வெடித்தது. இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வன்முறை சம்பவங்களால் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிரான பொதுமக்களின் கோபம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அம்பன்தோட்டாவில் உள்ள மகிந்த மற்றும் கோத்தபய ராஜபக்சேவின் பரம்பரை வீட்டை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இலங்கை முழுவதும் போராட்டங்கள், வன்முறைகள் தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் ஊரடங்கை மே 12 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

click me!