வென்டிலேட்டர் சிகிச்சைக்கு பின்னர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்ட நோயாளிகள் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் நீண்டகால பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுவரும் ஒவ்வொரு மூன்று நோயாளிகளில் ஒருவர் வாழ்நாள் முழுவதும் கடுமையான பக்கவிளைவுகளை சந்திக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தின் முன்னணி சுகாதார நிறுவனமான தேசிய சுகாதார சேவை மையம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், வைரஸ் தொற்றிலிருந்து மீண்ட பின்னரும் அவர்கள் என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் என அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் சுமார் 180 க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. உலக அளவில் சுமார் 93 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர், 50 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதை தடுக்க உலக நாடுகள் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டும் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. மாறாக வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிவேகமாக பரவி வருகிறது. மக்கள் கொத்துக்கொத்தாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். பிரத்தியேக தடுப்பூசி வந்தால் மட்டுமே இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் அதற்கான ஆராய்ச்சிகளில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். வைரஸ் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வரும் நிலையில், இங்கிலாந்து முன்னணி சுகாதார நிறுவனம் இந்த வைரஸ் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டுவரும் ஒவ்வொரு மூன்று நோயாளிகளிலும் ஒருவர் ஆயுட் காலம் முழுக்க பல்வேறு பக்க விளைவுகளால் பாதிக்கப்படக்கூடும் என எச்சரித்துள்ளது. கொரோனாவிலிருந்து மீண்டுவரும் நோயாளிகள் சுமார் 30 சதவீதம் அளவுற்கு நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகின்றனர். அவர்கள் கடுமையான மனச்சோர்வு மற்றும் மன அசௌகரியம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் வென்டிலேட்டர் சிகிச்சைக்கு பின்னர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்ட நோயாளிகள் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் நீண்டகால பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து தெரிவித்துள்ள இங்கிலாந்து தேசிய சுகாதார மையத்தின் கோவிட்-19 தடுப்பு தலைவர் ஹிலாரி ஃபிலாய்ட், கொரோனா வைரஸ் இல்லையென முடிவுகள் வந்த பின்னரும் பல நோயாளிகளுக்கு சிகிச்சை தேவைப்படுகிறது, நோயிலிருந்து குணப்படுத்தப்பட்ட 40 முதல் 50 வயதுடைய நோயாளிகளில் பலர் இன்னும் பல மோசமான பிரச்சனைகளுக்கு ஆளாகி அதற்காக சிகிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு ஆளான நபர்கள் ஜிம், நீச்சல், நடைபயிற்சி போன்ற அனைத்தையும் தாங்களாகவே செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது அவர்களால் படுக்கையிலிருந்து எழுந்திருக்ககூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பலருக்கு நோய்த்தொற்று இல்லை என முடிவுகள் வந்தாலும் அவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் என அவர் கூறியுள்ளார்.