ரூ.600 கட்டணம் கொடுத்து ஆண்களைக் கட்டிப்பிடிக்கும் சீனப் பெண்கள்!

Published : Jun 07, 2025, 11:10 PM IST
Chinese male mums

சுருக்கம்

சீனாவில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஆறுதலுக்காக ஆண்களைக் கட்டிப்பிடிக்கும் சேவை பிரபலமாகி வருகிறது. Male Mums எனப்படும் இவர்கள், பெண்களுக்குத் தாய்மையின் அரவணைப்பை வழங்கி, அவர்களின் மனநலனைப் பேணுகின்றனர்.

நவீன வாழ்க்கை முறை ஏற்படுத்தும் மன அழுத்தத்திலிருந்து ஆறுதல் தேடி, சீனப் பெண்கள் ரூ.600 (50 யுவான்) பணம் கொடுத்து ஆண்களைக் கட்டிப்பிடிக்கிறார்கள். இந்த வினோதமான சேவையைச் செய்யும் ஆண்கள் Male Mums என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த கட்டிப்பிடி வைத்தியம் சீனாவில் பிரபலமாகி வருகிறது.

ஆண்களின் கட்டிப்பிடிக்கும் சேவை

பெண்களைக் கட்டிப்பிடித்து சேவை செய்யும் ஆண்கள், பெரும்பாலும் பெண்களைப் போல மேக்அப் செய்துகொண்டிருக்கிறார்கள். விக் அணிந்து கொள்கிறார்கள். சிலர் பாரம்பரிய சீன உடைகளான செங்ஸாம் போன்றவற்றை அணிகின்றனர். இவர்களின் முக்கிய நோக்கம், பெண்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, அவர்களுக்கு தாய்மையின் அரவணைப்பையும், ஆறுதலையும் வழங்குவதுதான்.

இதற்காக சீனப் பெண்கள் 5 நிமிடத்துக்கு ரூ.250 முதல் ரூ.600 வரை (20 முதல் 50 யுவான்) கட்டணம் செலுத்துகிறார்கள். பெரும்பாலான பெண்கள் இவர்களிடம் தங்களின் தனிப்பட்ட கஷ்டங்கள், அலுவலகப் பிரச்சனைகள் அல்லது வாழ்க்கைப் போராட்டங்கள் குறித்துப் பேசுகின்றனர். கட்டிப்பிடிக்கும் ஆண்கள் அவற்றைப் பொறுமையுடன் கேட்டு, ஆறுதல் கூறுகின்றனர்.

ஏன் இந்தச் சேவை?

சீனாவின் அதிவேக நகர்ப்புற வளர்ச்சியும், கடுமையான போட்டி நிறைந்த சமூகமும் பல பெண்களுக்கு உணர்ச்சிபூர்வமான தனிமையையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்ப உறவுகளில் ஏற்படும் இடைவெளிகள், பணிச்சுமை, மற்றும் சமூக எதிர்பார்ப்புகள் ஆகியவை பெண்களுக்குத் தாய்மையின் அரவணைப்பிற்கான ஏக்கத்தை உருவாக்குகின்றன.

உளவியல் ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் பெறுவதில் உள்ள தயக்கம் காரணமாக, இத்தகைய ஆண்களின் அரவணைப்பை சீனப் பெண்கள் நாடுகிறார்கள். இது அவர்களுக்கு ஒரு வித்தியாசமான ஆறுதலை வழங்குகிறது.

எப்போது தொடங்கியது?

மன அழுத்தத்தில் இருந்த ஒரு மாணவி, அதைச் சமாளிக்க, ஒரு கனிவான, பொருத்தமான “Male Mum”இன் அரவணைப்பை விரும்புவதாகவும், அதற்கு பணம் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் சமீபத்தில் ஆன்லைனில் பதிவிட்டுள்ளார்.

"நான் பள்ளியில் படிக்கும்போது ஒரு முறை கட்டிப்பிடிக்கப்பட்டேன். அப்போது பாதுகாப்பாக உணர்ந்தேன். ஒரு சுரங்க ரயில் நிலையத்தில் வைத்து நாம் 5 நிமிடங்கள் கட்டிப்பிடிக்கலாம்," என்று அவர் தனது பதிவில் எழுதியிருந்தார். இந்தப் பதிவு வைரலாகினது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அவரது பதிவில் கமெண்ட் செய்தனர். அதிலிருந்துதான் சீனாவில் Male Mums என்கிற கட்டிப்பிடிக்கும் சேவை செய்யும் ஆண்கள் பிரபலமாகியுள்ளனர்.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட்டின் அறிக்கைப்படி, Male Mums என்ற சொல் பெண்களுக்குரிய தாய்மைப் பண்புகளைக் கொண்ட ஆணைக் குறிக்கிறது. மென்மையும் பொறுமையும் கொண்டிருக்கும் ஆண்கள் இந்த சேவையில் ஈடுபடுகிறார்கள்.

சீனாவின் உளவில் பிரச்சினை

இந்தச் சேவை, சீன மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் மனநல பிரச்சினைகளைப் பிரதிபலிப்பதாகப் பார்க்கப்படுகிறது. இது வினோதமாகத் தோன்றினாலும், தனிமையில் வாடும் பல பெண்களுக்கு ஒருவித ஆறுதலையும், மன அமைதியையும் தருவதாகக் கூறப்படுகிறது. இந்த புதிய போக்கு, நவீன சமூகத்தில் மனித உறவுகளின் முக்கியத்துவத்தையும், உணர்வுகளைப் பரிமாறிக்கொள்வதன் தேவைகளையும் எடுத்துக்காட்டுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?