
முதுகைப் பலப்படுத்த தவளைகளை உயிரோடு விழுங்கலாம் என்று உறவினர்கள் கூறியதை நம்பி, 8 தவளைகளை விழுங்கிய 82 வயது மூதாட்டிக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த வினோத சம்பவம் சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஹாங்சோ பகுதியில் நடந்துள்ளது.
ஜாங் என்ற அந்த மூதாட்டி நீண்ட நாட்களாக முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தார். அப்போது, அவரது உறவினர்கள் சிலர், "உயிருள்ள தவளைகளை முழுதாக விழுங்கினால் முதுகுவலி சரியாகிவிடும்" என்று கூறியுள்ளனர்.
இதை உண்மை என நம்பிய ஜாங், தனது குடும்பத்தினரிடம் தவளைகளைப் பிடித்து வரச் சொன்னார். அவர்களும் 8 சிறிய தவளைகளைப் பிடித்து வந்துள்ளனர்.
ஜாங் முதலில் 3 தவளைகளையும், அடுத்த நாள் 5 தவளைகளையும் விழுங்கியுள்ளார். தவளைகளை விழுங்கிய சில மணி நேரங்களிலேயே அவருக்கு முதுகுவலியைவிட கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை, குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவர்கள் அவருக்குச் செய்த பரிசோதனையில், உயிருள்ள தவளைகளை விழுங்கியதால் ஜாங்கின் வயிற்றில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதும், சில ஒட்டுண்ணிகள் (Parasites) சேர்ந்துள்ளதும் கண்டறியப்பட்டது.
யாரோ சொன்ன மூடநம்பிக்கையை நம்பி, தவளைகளை உயிரோடு விழுங்கிய அந்த மூதாட்டிக்கு முதுகுவலியுடன் வயிற்று வலியும் சேர்ந்து, உடல் பாதிப்புகளும் அதிகரித்தன. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.