
இந்தியாவை தாக்க பாகிஸ்தானுக்கு உதவிய சீனா : காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது அப்பாவி மக்கள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா அடுத்தடுத்து பல்வேறு தடைகளை விதித்தது. சிந்து நதி நீர் ஒப்பந்தம், இந்தியாவில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான் பரப்பில் பறக்க தடை என அடுத்தடுத்த நடவடிக்கை எடுத்த இந்திய அரசு, யாரும் எதிர்பார்க்காத நிலையில் இரவோடு இரவாக தீவிரவாதிகளின் மையங்களின் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு ஆப்ரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டது.
இதனையடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே எல்லையோரங்களில் கடும் மோதல் நடைபெற்றது. இதில் பாகிஸ்தானின் பல்வேறு இடங்கள் தாக்குதலுக்கு உள்ளானது. இந்தியாவின் எல்லையோர மாநிலங்கள் மீதும் ட்ரோன் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் திடீரென இரு தரப்பும் மோதலை நிறுத்துவதாக அறிவித்தது. இதனிடையே இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் தாக்கியதாகவும் கூறப்பட்டது. இதனால் இந்தியாவிற்கு பல ஆயிரம் கோடி நஷ்டம் எனவும் தகவல் வெளியானது.
இதனிடையே இந்தியா மீது பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. அப்போது ஆயிரக்கணக்கான ட்ரோன்களை தாக்குதலுக்கு பயன்படுத்தியது. இதில் இந்தியா மீது விழுந்த ட்ரோன் துருக்கியிடம் இருந்து பாகிஸ்தான் வாங்கியது தெரியவந்தது. மேலும் சீனா கொடுத்த வான் பாதுகாப்பு கவசம் மூலமாக இந்தியாவின் தாக்குதலை பாகிஸ்தான் தடுத்ததாகவும் கூறப்பட்டது. சீனாவின் பல ஏவுகணைகளை பாகிஸ்தான் பயன்படுத்தியது. அதிலும் சீனாவின் அதிநவீன ஏவுகணைகள் என்று அழைக்கப்படும் PL-15E ஏவுகணைகளை பாகிஸ்தான் பயன்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் இந்திய ராணுவ விமானங்களை தாக்க பாகிஸ்தானுக்கு சீனாவின் ராணுவ செயற்கைக்கோள் உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் துருப்புக்கள் மற்றும் ஆயுதங்கள் எங்கே உள்ளன, போர் விமானங்கள் எந்த ஹேங்கரில் உள்ளன என்பது உள்ளிட்ட பல விஷயங்களை திறம்பட கண்டறிய சீனா தனது ரேடார் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை பாகிஸ்தானுக்கு வழங்கி உதவியது என இந்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளது.