கடந்த மூன்று மாத காலமாக விரல் பகுதியில் சீன படைகள் தாழ்வான பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன. தற்போது அவர்கள் அங்கு பதுங்கு குழிகளையும் மற்றும் தற்காலிக கட்டிடங்களையும் கட்டத் தொடங்கியுள்ளனர்
கிழக்கு லடாக் பகுதியில் பாங்காங் த்சோ ஏரியின் தெற்கு கரையில் கடந்த 29ஆம் தேதி சீன படையினர் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அதை இந்திய வீரர்கள் முறியடித்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. இதே நேரத்தில் சீன படையினர் தாழ்வான பகுதியில் உள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 3 மாதத்துக்கும் மேலாக எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. ஜூன் 15ஆம் தேதி இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து சீன ராணுவத்தினர் நடத்திய வன்முறை தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. ஆனாலும் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து இரு நாடுகளும் படைகளை பின்வாங்க ஒப்புக் கொண்டன. கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து படைகளை பின்வாங்கிக் கொண்ட சீனா, ஆனால் கிழக்கு லடாக்கில் விரல் பகுதி, டப் சாங் மற்றும் கோக்ரா ஆகிய பகுதிகளிலிருந்து படைகளை பின்வாங்க மறுத்துவருகிறது.
இந்நிலையில் கடந்த மூன்று மாத காலமாக விரல் பகுதியில் சீன படைகள் தாழ்வான பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன. தற்போது அவர்கள் அங்கு பதுங்கு குழிகளையும் மற்றும் தற்காலிக கட்டிடங்களையும் கட்டத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ஆகஸ்ட் 29-30 அன்றிரவு சீனா இந்திய எல்லையில் ஊடுருவ முயன்றது. சுமார் 500 சீனப் படையினர் அங்குள்ள ஒரு மலைச்சிகரத்தை ஆக்கிரமிக்க முயன்றனர். ஆனால் அந்த முயற்சி இந்திய இராணுவத்தால் முறியடிக்கப்பட்டது. பிளாக் டாப் என்ற சிகரத்தை கைப்பற்ற சீனா முயற்சித்தது. அந்த சிகரத்தை கைப்பற்றி விட்டால் சுஷூலின் ஒரு பெரிய பகுதியை சீனா வலுவாக வைத்திருக்க முடியும் என்பதால் அது இந்த திட்டத்தை வகுத்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்திய வீரர்கள் சிகரத்தின் உச்சியில் உள்ள நிலையில் தாழ்வான பகுதிகளில் சீன படையினர் இருப்பதாகவும் அவர்களின் எந்த திட்டமும் நிறைவேறாது எனவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தால் லடாக் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது, இதை தணிக்க இந்திய சீன-ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர், இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளிலிருந்தும் பிரிகேட் கமாண்டர் லெவல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சுஷூல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மோல்டோவாவில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. சீனாவின் அத்துமீறல்களை இந்திய ராணுவம் முறியடித்து வரும் நிலையில், இந்திய ராணுவம் அமைதியை விரும்புகிறது, ஆனால் அதே நேரத்தில் அதன் எல்லைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதும் அதற்குத் தெரியும் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் கைலாஷ்-மானசரோவர் ஏரியையொட்டி சீனா ஏவுகணைகளை நிறுத்தி வருகிறது எனவும், லடாக்கையொட்டியுள்ள ஹோடன் விமான தளத்தில் ஜே-20 போர் விமானங்களை நிறுத்தி உள்ளதாகவும், வான் ஏவுகணைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.