சீனாவில் கடந்த மூன்றரை மாதங்களில் ஏப்ரல் 7ம் தேதி(செவ்வாய்க்கிழமை) முதன்முறையாக கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்று சீன அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் காட்டுத்தீயாய் பரவி, பேரிழப்புகளை ஏற்படுத்திவருகிறது. மருந்தே இல்லாத கொரோனாவிற்கு உலகம் முழுதும் இதுவரை 78 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
மனித குலத்திற்கே பெரும் சவாலாக திகழும் கொரோனா வைரஸ், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் ஈடுகட்ட முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவில் 3 லட்சத்து 77 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை அமெரிக்காவில் 12 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இத்தாலியில் கொரோனாவிற்கு 16 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் ஸ்பெய்னில் 13 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 5000ஐ நெருங்கிவிட்டது.
சீனாவில் உருவான கொரோனா, அந்த நாட்டை விட அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெய்னில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இதுவரை கொரோனாவால் 81,740 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 3331 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ஆனால் சீன அரசு, கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டுவதாக குற்றச்சாட்டு உள்ளது.
உலகத்தையே இக்கட்டான மற்றும் நெருக்கடியான சூழலில் சிக்கவிட்ட, சீனாவில் கடந்த மூன்றரை மாதங்களில் முதன்முறையாக ஏப்ரல் 7ம் தேதி(செவ்வாய்க்கிழமை) யாருமே கொரோனாவிற்கு உயிரிழக்கவில்லை என்று சீனாவின் சுகாதார ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட ஜனவரி மாதம் முதல் தொடர்ச்சியாக தினமும் சீனாவில் கொரோனாவிற்கு சிலர் பலியாகி கொண்டிருந்த நிலையில், இந்த மூன்றரை மாதங்களில் இன்றுதான் ஒரு உயிரிழப்பு கூட நிகழவில்லை என சீன அரசு தெரிவித்துள்ளது.
அதேபோல பாதிப்பு எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது. ஏப்ரல் 6ம் தேதி(திங்கட்கிழமை) சீனாவில் வெறும் 39ம் பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்த சீன அரசு, இன்றைய தினம்(செவ்வாய்க்கிழமை) வெறும் 32 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. அந்த 32 பேரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா தீவிரமானபோதே, விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுவிட்டநிலையில், இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 32 பேரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என சீனா தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவின் பிறப்பிடமான வூஹான் நகர மக்கள் நாளை முதல் வெளியூர்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பும் இறப்பு எண்ணிக்கையும் சீனாவில் குறைந்துவிட்டதாக சீனா தெரிவித்திருப்பது சர்வதேசத்துக்கு நல்ல சமிக்ஞை. ஆனால் சீனா, கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டிக்கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.