#UnmaskingChina: கல்வான் பள்ளத்தாக்கு பகுதி முழுவதும் சீனாவுக்கே சொந்தம்..! நள்ளிரவில் அறிவித்த திருட்டு சீனா!

By Ezhilarasan Babu  |  First Published Jun 20, 2020, 11:33 AM IST

கல்வான் பள்ளத்தாக்கு பகுதி  சீனாவின் எல்லைக் கோட்டுக்குள் அமைந்துள்ளது, சீன பாதுகாப்பு படையினர் பல ஆண்டுகளாகவே அங்கு ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகள் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினர் நடத்திய வன்முறை தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ள நிலையில் இருநாட்டுக்கும் இடையே பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது, இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கு முழுவதும் சீனாவுக்கு சொந்தமானது என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. ஏற்கனவே சீனாவின் அட்டூழியத்தால் இந்தியா கடும்  கோபத்தில் இருந்துவரும் நிலையில் சீனாவின் இந்த அறிக்கை ஒட்டுமொத்த இந்தியாவையும் கொந்தளிப்பு அடைய வைத்துள்ளது. இந்திய-சீன எல்லையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பதற்றம் நீடித்து வருகிறது. கடந்த மே-22ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் தனது படைகளைக் குவித்த சீனா, இந்தியா எல்லையில் தொடர்ந்து அத்துமீறி வருவதாகவும், இனி சீனா அதை அனுமதிக்காது எனவும் குற்றஞ்சாட்டியது. அதைத்தொடர்ந்து அடிக்கடி இந்திய எல்லைக்குள் ஊடுருவி  வம்பு செய்து வந்த சீன ராணுவம்,  கடந்த திங்கட்கிழமை இரவு ஜூன் 15 ஆம் தேதி, இந்திய எல்லைக்குள் பயங்கர ஆயுதங்களுடன் ஊடுருவி இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது, அதில் சீனர்களுடன் போராடி 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம்  அடைந்துள்ளனர். அதேபோல் இந்திய வீரர்கள் திருப்பி தாக்கியதில் 35 சீன ராணுவத்தினர்  உயிரிழந்ததாக அமெரிக்க உளவு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

ஆனாலும் சீனா அதுகுறித்து எந்தவித தகவல்களையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இந்நிலையில் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, அதுமட்டுமின்றி சீனாவின் அத்துமீறலை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது எனவும், தொடர்ந்து சீண்டினால் தகுந்த பதிலடி கொடுக்கும் ஆற்றல் இந்தியாவுக்கு இருக்கிறது  எனவும் சீனாவை பிதமர் மோடி எச்சரித்துள்ளார். ஆனால் இந்தியாவே இந்த மோதலுக்கு காரணம் என இந்தியாவை குற்றஞ்சாட்டிவரும்  சீனா, திடீரென நேற்று நள்ளிரவு 12 மணிக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  கல்வான் பள்ளத்தாக்கு முழுவதும் சீனாவுக்கு சொந்தம் என அந்நாடு உரிமை கொண்டாடியுள்ளது. சீனா வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- இந்தியப்படைகள் எல்லையை தாண்டி சீன வீரர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தியதன் மூலம் ஜூன்-6 ஆம் தேதி செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு  மீறப்பட்டுள்ளது, ஜூன்-6 ஒப்பந்தத்தின்படி இந்தியத் தரப்பு எந்த விதத்திலும் எல்லையை கடக்காது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வான் பள்ளத்தாக்கில் ரோந்து  வசதிகளை உருவாக்குவது மற்றும் அங்கே நிறுத்தப்பட்டுள்ள படைகளை படிப்படியாக திரும்பப் பெறுவது போன்றவைகள் குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

கல்வான் பள்ளத்தாக்கு பகுதி  சீனாவின் எல்லைக் கோட்டுக்குள் அமைந்துள்ளது, சீன பாதுகாப்பு படையினர் பல ஆண்டுகளாகவே அங்கு ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்தியப் படையினர் கல்வான் பள்ளத்தாக்கில் சாலை கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கு சீனா பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும் இந்தியா அதை பொருட்படுத்தவில்லை, அதே நேரத்தில் பல ஆத்திரமூட்டும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. அதேபோல் ஜூன்-6 ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறி அங்கு சில பாதுகாப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தியதுடன், சீன ராணுவத்தின் ரோந்து பணிக்கு இடையூறு ஏற்படுத்தியது. அதனையடுத்து இருநாடுகளும் ராஜதந்திர ரீதியில் அதை தீர்த்துக்கொள்ள பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது, அந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் இரு தரப்பினரும் அப்பகுதியில் இருந்து வெளியேற ஒப்புக் கொள்ளப்பட்டது. அதேபோல்  கல்வான் ஆற்றைக் கடந்து ரோந்து மற்றும் கட்டமைப்புகளை அமைக்க மாட்டோம் என இந்தியா உறுதி அளித்தது, அதனையடுத்து எல்லையில் பதற்றம் தணிந்து, நிலைமை சீராக இருந்துவந்த நிலையில் இந்தியாவின் முன்வரிசை ராணுவ துருப்புகள் ஜூன்- 6 செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறி சீன எல்லைக்குள் நுழைந்து அங்கு ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் சீன வீரர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியது. 

இதில் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.  எல்லை கட்டுப்பாட்டு பகுதியின் நிலைபாட்டை இந்திய வீரர்கள் வேண்டுமென்றே  ஒருதலைபட்சமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதுடன், ஆத்திரமூட்டும்  வகையில் செயல்பட்டனர். அந்த நிலையை கட்டுப்படுத்த சீன ராணுவத்தினர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்திய  இராணுவத்தின் நடவடிக்கைகள் எல்லைப்பகுதிகளில் நிலைமையை கேள்விக்குறியாகியுள்ளது. எல்லை விவகாரத்தில் இரு நாட்டு ஒப்பந்தத்தையும் மீறி சீன வீரர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இந்திய ராணுவம் செயல்பட்டது, எனவே எல்லைப்பகுதியில் மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் சீனா உள்ளது. ஆகவே இந்தியா எங்களுடன் இணைந்து செயல்படும்,  இரு தலைவர்களுக்கு இடையில் ஏற்பட்ட முக்கிய ஒருமித்த கருத்தை இந்தியா முழுமையாக பின்பற்றும் என்று நாங்கள் எதிர்பார்கிறோம்.  தற்போதைய நிலைமையை இராஜதந்திர மற்றும் ராணுவ  வழிகளில் தீர்க்க ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதுடன் கூட்டாக எல்லைப்பகுதிகளில் அமைதி மற்றும் ஸ்திரத் தன்மையை நிலைநிறுத்த இந்தியா முன்வர வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!