#UnmaskingChina: இந்தியா அழிவை தானே தேடிக்கொள்கிறது...!! சீனா திமிர் பேச்சு..!!

By Ezhilarasan Babu  |  First Published Jun 18, 2020, 12:46 PM IST

இரு அண்டை நாடுகளுக்கும் இடையே பிரச்சினை எழுந்த ஒவ்வொரு முறையும் சீனா புறக்கணிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் அழைப்புவிடுத்து வருகின்றனர்.


சீனாவை புறக்கணிக்க  வேண்டும் என பேசும் பிரபலங்களை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும் எனவும், அவர்கள் அப்படி செய்வதின் மூலம் இருதரப்பு உறவுகளும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுகிறது என சீனாவில் மனசாட்சியென கூறப்படும் குளோபல் டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை அன்று கிழக்கு லடாக் எல்லையில் இந்திய சீன ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர், இந்நிலையில் குளோபல் டைம்ஸ் இந்தியாவை எச்சரிக்கும் வகையில் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த மே-22 ஆம் தேதி பாங்கொங் த்சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா அத்துமீறியதாக கூறி  சீனா எல்லையில் ராணுவத்தை குவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Tap to resize

Latest Videos

இந்நிலையில் திங்கட்கிழமை இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை  இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் 20 இந்திய  ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் எல்லையில்  இந்திய ராணுவவீரர்கள்  வீரமரணம் அடைந்தது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அதேபோல் சீன தரப்பிலும் சுமார் 35 பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் உயிரிழப்பை ஒப்புக்கொண்ட சீனா, எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை கூற மறுத்துள்ளது. இந்நிலையில் எல்லை நிலவரம் குறித்து முக்கிய அமைச்சர்கள் மற்றும் ராணுவத் தளபதிகளுடன்  நடத்திய ஆலோசனையின்போது பிரதமர் மோடி, இந்தியா அமைதியை விரும்புகிறது என்றும், ஆனால் தொடர்ந்து ஆத்திரமூட்டினால் அதற்கு பொருத்தமான பதிலடி கொடுக்கும் திறன் கொண்டது இந்தியா என்றும் மோடி கூறியுள்ளார். இந்நிலையில் சீனாவை சர்வதேச அரங்கில் இருந்து தனிப்படுத்த வேண்டும் எனவும், சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் எனவும், இந்தியாவில் எதிர்ப்பு குரல் எழுந்து வருகிறது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத சீனா தனது மனசாட்சியான குளோபல் டைம்ஸ் நாளேட்டில் இந்தியாவை எச்சரிக்கும் வகையில் செய்தி வெளியிட்டுள்ளது. 

அதில்,  கூறப்பட்டிருப்பதாவது:- இந்தியாவில் சில தீவிர சீன எதிர்ப்பு குழுக்கள் மற்றும் தனி நபர்கள் சீனாவை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தை ஊக்கப்படுத்தி வருகின்றனர். பொறுப்பற்ற இதுபோன்ற செயல்கள் சர்வதேச அளவில் எதிரொலித்து வருவதாகவும், ஏராளமான பாலோயர்களைக் கொண்ட ஒரு சில இந்திய பிரபலங்கள் சீனாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருவதாகவும் அந்த நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் இந்தியாவில் சிலர் தங்கள் சொந்த நலன்களுக்காக சீனாவுடனான விரோதத்தை ஊக்கப்படுத்தி வருகின்றனர். இரு அண்டை நாடுகளுக்கும் இடையே பிரச்சினை எழுந்த ஒவ்வொரு முறையும் சீனா புறக்கணிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் அழைப்புவிடுத்து வருகின்றனர். இது இருதரப்பு உறவுக்கும் ஆபத்தை விளைவிக்கும், எனவே எல்லையில் ஏற்பட்ட மோதலுக்கு பின்னர் சீனாவை புறக்கணிக்க வேண்டும் என்று பரவலாக எழுந்துள்ள எதிர்ப்பு குரல்களை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும். இதுபோன்ற குரல்கள் ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார பிராந்தியத்தில்( இந்தியாவில்) மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும், மேலும் இது ஒரு சுய அழிவுக்கு வழிவகுக்கும் என சுட்டிக்காட்டியுள்ள அந்த  நாளேடு, எல்லை பிரச்சனைகளை முதலீடுகள் மற்றும் வர்த்தகத்துடன் கண்மூடித்தனமாக தொடர்புபடுத்திப் பார்ப்பது  நியாயமற்றது என  எச்சரித்துள்ளது.

 

click me!