covid-19 க்கு சீனா தடுப்பூசி உருவாக்கியுள்ளது என்றும், இந்நான்கு நாடுகளின் பொதுச் சுகாதார முறையை வலுப்படுத்த அது உதவும் என்றும் அவர் கூறினார்.
இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் சீனா மோதலை கடைபிடித்து வரும் நிலையில், தனக்கு ஆதரவாக தனது அண்டை நாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகள் சீனாவுக்கு ஆதரவாக இருந்து வரும் நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானும் அந்தப் பட்டியலில் இணைந்து இருப்பதாக தெரிகிறது. பூட்டான் பங்களாதேஷையும் ஈர்க்கும் நடவடிக்கையிலும் சீனா தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்-யி தலைமையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்துகொண்ட வீடியோ கான்பரன்சிங் கூட்டம் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் covid-19 தொற்றுநோயை கட்டுப்படுத்துவது குறித்தும், கொரோனா வைரஸ் தொற்றால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்தும் அவர்களிடையே உரையாடல் அமைந்ததாக கூறப்படுகிறது.
மேலும் சீனாவின் கனவு திட்டங்களில் ஒன்றான பெல்ட் சாலை அமைக்கும் முயற்சியின் முக்கிய அம்சங்கள் குறித்தும் அதில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இது குறித்து தெரிவித்துள்ள சீன வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு, ஆப்கனிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது ஹனீப் அட்மார் மற்றும் நேபாள வெளியுறவு துறை அமைச்சர் பிரதீப் குமார் கவ்லி ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர், அதே நேரத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி கலந்து கொள்ளவில்லை (வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக கலந்து கொள்ளவில்லை) அவருக்கு மாற்றாக பாகிஸ்தான் பொருளாதார விவகார அமைச்சர் மக்தூம் குஸ்ரோ பக்தியார் கலந்து கொண்டார். இந்த நான்கு நாடுகளும் கூட்டாக இணைந்து நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், உலகளவில் தொற்றுநோயை எதிர்ப்பதில் இந்நாடுகளுக்கிடையே ஒருமித்த கருத்தை வலுப்படுத்துவது, கொரோனா தொற்றில் அரசியல் மயமாக்கலை தவிர்ப்பது. கூட்டாக உலக சுகாதார சமூகத்தை உருவாக்குவது, மேலும் உலக சுகாதார அமைப்புடன் ஒன்றிணைந்து செயல்படுவது உள்ளிட்ட தீர்மானங்களும் முன்மொழியப்பட்டதாக கூறப்படுகிறது.
அதாவது கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனம் சீனாவை ஆதரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இந்த தீர்மானங்கள் முன்மொழியப்பட்டுள்ளது. மேலும் உலக சுகாதார அமைப்பில் இருந்து விடுபட போவதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ள நிலையில், சீனா, தனது அண்டை நாடுகளிடம் தனக்குள்ள ஆதரவை, அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எடுத்து காட்டும் முயற்சியாக இந்த கூட்டத்தை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அக்கூட்டத்தின்போது சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங்-யி பேசியதாவது:- சீனா மற்றும் பாகிஸ்தானில் இந்த நோய் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளில் இருந்து மற்ற இரு நாடுகளும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும், இந்த தொற்று நோயை கட்டுப்படுத்த உதவும் வகையில், பிராந்திய ரீதியில் ஒத்துழைப்பு அவசியம் என வாங்-யி தெரிவித்தார், மேலும் covid-19 க்கு சீனா தடுப்பூசி உருவாக்கியுள்ளது என்றும், இந்நான்கு நாடுகளின் பொதுச் சுகாதார முறையை வலுப்படுத்த அது உதவும் என்றும் அவர் கூறினார். மிகமுக்கியமாக தொற்றுநோய்க்கு பிறகு நான்கு நாடுகளும் சீனாவின் கனவு திட்டமான பெல்ட் மற்றும் சாலை திட்டத்தின் வளர்ச்சிக்கு வலுவான ஒத்துழைப்பு வழங்கிபணிகளை மீட்டெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார மண்டலம் (சிபிஇசி) மற்றும் இமயமலை குறுக்கு இணைப்பு நெட்வொர்க் (டிஎச்சிஎன்) கட்டுமான பணிகளை தாங்கள் தீவிரமாக ஊக்குவிப்போம் என வாங்-யி கூறியுள்ளார். மேலும் இந்த நடைபாதையை ஆப்கனிஸ்தான் வரைக்கும் விரிவுபடுத்துவதற்கு பிராந்திய இணைப்பின் நன்மைக்காக கதவுகளைத் திறப்பதற்கும் சீனா தயாராக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பதற்றத்திற்கு மத்தியில் இந்த கூட்டத்தை சீனா நடத்தியுள்ளது, சீனாவுடன் இணைந்து பாகிஸ்தானும் நேபாளமும் உட்கட்டமைப்பு திட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருவது இந்தியாவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.