South China Sea: தென் சீனக் கடலில் திமிரும் சீனா; தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யும் பீஜிங்; பின்னணி என்ன?

By Dhanalakshmi GFirst Published Dec 21, 2022, 1:06 PM IST
Highlights

தென் சீனக் கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பலமுறை அமெரிக்கா உள்பட உரிமை கொண்டாடும் நாடுகள் எச்சரித்தும், அவர்களை கொஞ்சமும் மதிக்காமல் என்ன செய்ய வேண்டுமோ அதை துணிந்து பீஜிங் செய்து வருகிறது. 
 

தென் சீனக் கடலில் ஆக்கிரமிக்கப்படாத தீவு நிலங்களை சீனா பகிரங்கமாக ஆக்கிரமித்து தனக்கான தளங்களை உருவாக்கி வருகிறது. கடல் வழி வர்த்தகத்திற்கு தென் சீனக் கடல் முக்கிய கேந்திரமாக திகழ்கிறது. இந்தப் பகுதியை ஆக்ரமித்துக் கொண்டால், எதிர்காலத்தில் மற்ற நாடுகள் தன்னிடம் மண்டியிட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு சீனா செயல்பட்டு வருகிறது என்று மேற்கத்திய நாடுகள் காலம் காலமாக கூறி வருகின்றன.  

சீனா நீண்ட காலமாக தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தீவு நிலங்களில் சர்ச்சைக்குரிய திட்டுகள், தீவுகள் மற்றும் ராணுவ தளவாடங்கள், துறைமுகங்கள், ஓடுபாதைகள் ஆகிவற்றை உருவாக்கி வைத்துள்ளது. தற்போது தென் சீனக் கடல் பகுதியில் ஆக்ரமிக்காத இடங்களை ஆக்கிரமித்து மீண்டும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதற்கான புகைப்படங்கள் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது ராணுவ தளவாடங்களை அமைப்பதற்கான முயற்சியாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி இருந்தாலும், இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 

புகைப்படங்கள்:
பீஜிங் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மீனவர்களைக் கொண்டு தற்போது கட்டுமானப் பணிகளை துவங்கியுள்ளது. ஏற்கனவே இருக்கும் மணல் திட்டுக்களை விட தற்போது பத்து மடங்கிற்கும் அதிகமான இடங்களை, நிலப்பரப்புகளை தென் சீனக் கடல் தீவுப் பகுதிகளில் சீனா அமைத்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக சீனா இது மாதிரியான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

தென் சீனக் கடலின் வடக்குப் பகுதியில் இருக்கும் எல்டாட் ரீப் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டில் சீனா பெரிய அளவில் ஹைட்ராலிக் எஸ்கலேட்டரை இறக்கி இருந்ததாக புளூம்பெர்க் செய்தி நிறுவனமும் பதிவு செய்து இருந்தது. அப்போது இருந்தே கடல் பகுதியில் இருக்கும் தீவுகளில் பணிகளை மும்முரமாக செய்து வருகிறது பீஜிங். சமீபத்தில் வெளியாகி இருக்கும் படங்களில் மணல் திட்டுக்கள், குவியல்கள், டிரக்குகள் ஆகியவை காணப்படுகின்றன. இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் சாட்டிலைட் மூலம் எடுக்கப்பட்டுள்ளன.

பிலிப்பைன்ஸ்:
தென் சீனக் கடல் பகுதியை பிலிப்பைன்ஸ்சும் உரிமை கொண்டாடி வருகிறது. நீதிமன்றம் வரை சென்று நீதியையும் பெற்றுள்ளது. ஆனால், சீனா இதை கொஞ்சமும் சட்டை செய்வதில்லை. பிலிப்பைன்ஸ் அருகிலேயே தனக்கான தளங்களை அமைத்துள்ளது. சாண்டி கே, லாங்கியம் கே, விட்சன் ரீப் என்றழைக்கப்படும் இடங்களில் ஆக்கிரமிப்புகளை சீனா செய்துள்ளது. 

தென் சீனக் கடலின் 80% பகுதி தனக்கு சொந்தமானது என்று சீனா கூறி வருகிறது. 1947ஆம் ஆண்டின் கடல் வரைபடத்தை மேற்கோள் காட்டி உரிமை கோரி வருகிறது. தனக்கு சொந்தமான நிலத்தில் தன்னால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று பகிரங்கமாகவே கூறியும் வருகிறது. 

உரிமை கோரும் நாடுகள்:
இந்தப் பகுதியை பிலிப்பைன்ஸ், தைவான், மலேசியா, இந்தோனேஷியா, வியட்நாம், புரூனே ஆகிய நாடுகளும் உரிமை கோரி வருகின்றன. இந்தப் பகுதியை உரிமை கோருவதுடன், யாரும் எளிதில் இந்தப் பகுதியில் உள்ளே நுழையாத வகையில் கடற்படையிலும் பெரிய அளவில் முதலீடு செய்து கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது சீனா. கடற்படை கப்பல்கள் ரோந்து செல்கின்றன. ஒரு காலத்தில் யாரும் கண்டும் கொள்ளாமல் இருந்த இந்த கடல் பகுதி தற்போது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்குக் காரணம் இந்த கடல் பகுதி உலக நாடுகளின் முக்கிய கடல்சார் வணிகப் பகுதியாக இருப்பதுதான். குறிப்பாக தைவானுடன் சீனாவுக்கு உரசல் அதிமகான பின்னர் இதை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் உணர்ந்து இருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகராக இருந்த நான்சி பெலோசி தைவான் வந்திருந்தபோது, தென் சீனக் கடலில் போர் விமானங்களை பறக்கவிட்டு, சீனா அதிரடி காட்டி இருந்தது. பிலிப்பைன்ஸ் கடல் மார்க்கமாக நான்சி பெலோசி தைவானை வந்தடைந்தார். இது சீனா, அமெரிக்கா இடையே பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

துணிந்த வியட்நாம்:
இதுபோன்று அண்டை நாடுகளையும் தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பீஜிங் மிரட்டி வருகிறது. அதற்கான நடவடிக்கைதான், தென் சீனக் கடல் ஆக்கிரமிப்பு. சீனாவின் ஆக்கிரமிப்பு தைவானையும் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட வைத்துள்ளது. வியட்நாமும் தனது கடல்பரப்பு பகுதியில் நில ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தது. 

சொல்றது ஒன்னு செய்யறது ஒன்னு:
தென் சீனக் கடல் பகுதியில் ரெட் பாங்க் பகுதிக்குள் சீன கப்பல்கள் மூக்கை நுழைத்தன. இதற்கு வியட்நாம் கடுமையான எதிர்ப்பை இந்த மாதத்தில் தெரிவித்து இருந்தது. இது ஒரு சர்ச்சைக்குரிய பகுதி. இங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுத் திட்டப் பணிகளை இருநாடுகளும் இணைந்தே மேற்கொள்வது என்று சமீபத்தில் கலந்தாலோசித்து இருந்தன. ஆனால், அதற்குள் சீனா முந்திக் கொண்டு அந்தப் பகுதியை சூழ்ந்து கொண்டது. கடந்த ஆண்டு, பிலிப்பைன்ஸ் நாட்டின் மேற்கே 175 கடல் மைல்கள், அதாவது 324 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள விட்சன் ரீஃப் பகுதியில் 200க்கும் மேற்பட்ட ராணுவக் கப்பல்களை சீனா குவித்தது. வியட்நாமும் போட்டிக்கு கப்பல்களை நிறுத்தியது. 

சர்வதேச நீதிமன்றம்:
சர்வதேச நீதிமன்றத்தில் சீனாவுக்கு எதிராக வியட்நாம் வழக்கு தொடுத்து இருந்தது. தீர்ப்பும் வியட்நாமுக்கு ஆதரவாக 2016ஆம் ஆண்டு வெளியானது. ஆனால், இந்த தீர்ப்பை தூக்கியெறிந்த சீனா அடாவடியாக சர்ச்சைக்குள்ளான கடல் பரப்பில் ஆயிரக்கணக்கான மீன்பிடி கப்பல்களை அனுப்பியது. சர்ச்சைக்குள்ளான பகுதி சர்வதேச நீதிமன்றத்துக்கு கட்டுப்பட்டது அல்ல என்று தெரிவித்தது.
 
குவிந்து கிடக்கும் இயற்கை வளங்கள்:
தென் சீனக் கடல் பகுதியில் இயற்கை வளம் நிறைந்து காணப்படுகிறது. மீன்கள், மினரல்கள், எண்ணெய் வளங்கள், இயற்கை எரி வாயு என கொட்டிக் கிடப்பதால் இந்தப் பகுதியை சீனா முக்கிய பகுதியாக பார்க்கிறது. இத்துடன், முக்கிய எண்ணெய் கப்பல்கள் வந்து செல்லும் கடல் மார்க்கமாக இருக்கிறது. மலாக்கா ஜல்சந்திதான் பசிபிக் கடலில் இருக்கும் தென் சீனக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் இருக்கும் அந்தமான கடல் பகுதியை இணைக்கிறது. வடக்குப் பகுதிக்கு எண்ணெய், மினரல்களும், தெற்குப் பகுதிக்கு உணவு மற்றும் தயாரிப்பு பொருட்களும் கடல் மார்க்கமாக கொண்டு செல்லப்படுகின்றன. இந்தப் பகுதியில் இருக்கும் ஸ்பார்ட்லி தீவில் தான் அதிகளவில் எண்ணெய் வளம் இருக்கிறது. அதனால்தான் சீனா இந்த இடத்தை குறிவைத்துள்ளது. இதே இடத்தை மலேசியா, பிலிப்பைன்ஸ், புரூனே, வியட்நாம் ஆகிய நாடுகளும் உரிமை கோரி வருகின்றன. இத்துடன் தைவானும் இணைந்து கொண்டுள்ளது. அமெரிக்காவும் அவ்வப்போது இப்பகுதிக்கு கப்பலை அனுப்பினாலும், சீனா அதை கண்டு கொள்வதில்லை. தொடரும் யுத்தமாக நகர்ந்து செல்கிறது.

click me!