சீனாவுக்கு சிக்கல்.. மொத்தமாக அள்ளிக்கொண்டுவர கண்ணி வைத்து காத்திருக்கும் இந்தியா... உற்றுநோக்கும் உலக நாடுகள்

By Thiraviaraj RM  |  First Published May 5, 2020, 5:32 PM IST

இந்தியாவில் தொழில் தொடங்குவதற்காக நாட்டின் பல பகுதிகளில், பயன்படுத்தப்படாமல் இருக்கும் 4 லட்சத்து 61 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. 
 


கொரோனா விவகாரத்தால் சீனாவின் போக்கு பிடிக்காமல் அங்கிருந்து வெளியேறும் அயல்நாட்டு நிறுவனங்களை, இந்தியாவில் தொழில் தொடங்க அழைக்கும் விதமாக லக்சம்பர்க் நாட்டைவிட இருமடங்கு நிலத்தை வழங்க இந்தியா முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

கொரோனா அச்சுறுத்தலால், உற்பத்தி தேக்கம் அடைந்து பல நிறுவனங்களுக்கு வரவேண்டிய சரக்குகள் வராமல் தேக்கமடைந்தன. இதனால் சீனாவை மட்டும் அதிகம் சார்ந்து இருப்பதை, பல்வேறு நிறுவனங்களும் குறைத்து அங்கிருந்து வெளியேற விரும்புவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சீனாவில் இருந்து ஜப்பான், தென் கொரியா, தைவான், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தொழில் நிறுவனங்களை ஈர்க்க இந்தியா திட்டம் தீட்டியுள்ளது. இந்த நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்காக நாட்டின் பல பகுதிகளில், பயன்படுத்தப்படாமல் இருக்கும் 4 லட்சத்து 61 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. 

Latest Videos

ஏற்கனவே தொழில் துறையில் முன்னணியில் இருக்கும் குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தொழிற்சாலைகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்து 15 ஆயிரம் நிலங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. தொழிற்துறை நிறுவனங்களை ஈர்க்க இந்தியா ஒதுக்கியுள்ள நிலங்கள், உலக வங்கியின் கணக்குப்படி லக்சம்பர்க் நாட்டைவிட இரு மடங்கு பெரியது. நிலம், மின் ஆற்றல், தண்ணீர், சாலை வசதி  உள்பட உள்கட்டமைப்பு வசதி மற்றும அதிக மனித சக்திகளை வழங்குவது அந்த நிறுவனங்களை ஈர்க்க இந்தியாவிற்கு வரவைக்க உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.

மின்சாரம், மருந்துகள், மருத்துவ சாதனங்கள், மின்னணுவியல், கனரக பொறியியல், சூரிய உபகரணங்கள், உணவுப் பதப்படுத்துதல், ரசாயனங்கள் மற்றும் ஜவுளி போன்ற 10 துறைகளில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம், கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை சீர்செய்து, அதிகளவில் வேலை வாய்ப்பினை உருவாக்க முடியும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், சீனாவில் இருக்கும் பேஸ்ஃபுக், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், டெஸ்லா உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் இந்தியா பக்கம் தங்கள் கவனத்தை திருப்ப முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களை தங்கள் பக்கம் ஈர்க்க தமிழக அரசு ஒரு குழுவை அமைத்து அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக களமிறங்கி வருகிறது. 

click me!