உலகம் முழுவதும் பரவும் அமெரிக்க வைரஸ்..?? சீனா சொன்ன பரபரப்பு குற்றச்சாட்டு..!!

By Ezhilarasan BabuFirst Published May 25, 2020, 2:57 PM IST
Highlights

இந்த அரசியல் வைரஸ் சீனாவை  குறிவைத்து தாக்கவும் , காயப்படுத்தவும் , தனக்குள்ள ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துகிறது. 

அமெரிக்காவின் அரசியல் வைரஸ் இரு நாட்டுக்கும் இடையே பனிப்போரை ஏற்படுத்த நிர்பந்திக்கிறது என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி  தெரிவித்துள்ளார்.  கொரோனா வைரஸ் தொடர்பாக சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு , ஹாங்காங்கில் ஏற்பட்டுள்ள போராட்டம் ,  சீனா அரசியல் வானில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சீன வெளியுறவு துறை அமைச்சர் அமெரிக்காவை இவ்வாறு கடுமையாக  விமர்சித்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது ,  சீனாவில் தோன்றிய கொரொனா வைரஸ் உலக வல்லரசான அமெரிக்காவையே நிலைகுலையச் செய்துள்ளது.  இதுவரை அமெரிக்காவில் 16 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது , அங்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 99 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  இந்த வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்கா எத்தனையோ முயற்சிகளை எடுத்தும் பலனில்லை . 

 

இந்நிலையில் அதன் பொருளாதாரம் அதளபாதாளத்தில்  விழுந்துள்ளது.  இதனால் செய்வதறியாது திகைத்து வரும் அமெரிக்காவின் ஒட்டுமொத்த கோபமும் சீனா மீது  திரும்பியுள்ளது. உலகளவில் ஏற்பட்டுள்ள இந்த பேரழிவுக்கு சீனா தான் காரணம் ,  சீனா திட்டமிட்டே  இந்த வைரசை பரப்பியது , வுஹான் ஆய்வு கூடத்தில்  மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்த கொரோனா வைரஸ், இதற்கு  சீனா பதில் சொல்லியே ஆகவேண்டும் என அடுக்கடுக்காக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இதுமட்டுமின்றி தென் சீன  கடல் பகுதியிலும் ,  இந்திய எல்லையிலும் ஆக்கிரமிப்பு மனப்போக்குடன் சீனா செயல்பட்டு,  தன்னுடைய வல்லாதிக்கத்தை அண்டை நாடுகளிடம் காட்ட முயற்சி செய்கிறது என அமெரிக்கா சீனாவை கடுமையாக சாடியுள்ளது.  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சீன வெளியுறவு துறை அமைச்சர் " வாங் யி "  அமெரிக்கா சீனாவுடனான உறவை ஒரு  பனிப்போரின் விளிம்பிற்கு தள்ளுகிறது . அமெரிக்காவின் சில அரசியல் சக்திகள் சீனா அமெரிக்கா உறவை நெருக்கடிக்கு தள்ளுகின்றன என்பதை நன்கு உணர்ந்திருக்கிறோம்.

 

covid-19 பரவ ஆரம்பித்ததிலிருந்து வர்த்தகம், உள்ளிட்ட பல துறைகளில்  இரு நாடுகளுக்கும் இடையிலான பகை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா வைரஸ் பேரழிவை தாண்டி உலகம் முழுவதும் அமெரிக்கா என்ற அரசியல் வைரஸ் தீவிரமாக பரவிவருகிறது .  இந்த அரசியல் வைரஸ் சீனாவை  குறிவைத்து தாக்கவும் , காயப்படுத்தவும் , தனக்குள்ள ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துகிறது. சில அரசியல்வாதிகள் அடிப்படை உண்மைகளை முற்றிலுமாக புறக்கணித்து சீனாவுக்கு எதிராக பல பொய்களை இட்டுக்கட்டிவருகின்றனர்.  மேலும் சீனாவுக்கு எதிராக சதி திட்டம் திட்டுகின்றனர் என  சீன வெளியுறவுத்துறை  அமைச்சர் கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பெயரைக் குறிப்பிடாமல் அவர்  இவ்வாறு விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 

 

click me!