தெற்கு சீனக் கடலில் மீண்டும் பதற்றத்தைக் கிளப்பும் சீனா; அமெரிக்கா மூக்கு நுழைப்பு; அடிபணியுமா பிலிப்பைன்ஸ்?

By Dhanalakshmi G  |  First Published Jun 19, 2023, 2:57 PM IST

தற்போது தெற்கு சீன கடலில் இருக்கும் 490 ஹெக்டேர் பரப்பளவிலான ஸ்பார்ட்லி என்று அழைக்கப்படும் தீவுக் கூட்டம்தான் ஆசிய நாடுகளின் கவனத்தைக் கவர்ந்துள்ளது.  
 


ஸ்பார்ட்லி தீவுக் கூட்டமானது சீனா, மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம் இடையே அமைந்துள்ளது. இந்தத் தீவுக்கூட்டத்தால் தற்போது பிலிப்பைன்ஸ், சீனா இடையே புகைச்சல் முற்றியுள்ளது. இதற்குக் காரணம் சமீபத்தில் இந்தத் தீவுக்கு சீனா தனது கடற்படை கப்பலை அனுப்பியதுதான். 

தற்போது இந்தத் தீவை பிலிப்பைன்ஸ் சுற்றுலா தளமாக பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சீனாவும் இந்தப் பகுதியில் நுழைந்து ஆதிக்கம் செலுத்தி வருவது பிலிப்பைன்ஸ் நாட்டை சிந்திக்க வைத்து இருக்கிறது.

Tap to resize

Latest Videos

ஸ்பார்ட்லி தீபகற்பம் 100க்கும் மேற்பட்ட குட்டி தீவுகளையும், திட்டுக்களையும் கொண்டுள்ளது. எதற்காக இந்த தீவுகளை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று சீனா துடித்துக் கொண்டு இருக்கிறது என்றால் அங்கு மிதமிஞ்சி இருக்கும் மீன் வளங்கள், எண்ணெய் மற்றும் காஸ் வளங்களை அபகரித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். சீனா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகள் இந்த மொத்த தீவுக் கூட்டமும் தங்களுக்குத்தான் சொந்தம் என்று தனித்தனியாக கோரி வருகின்றன. ஆனால், இந்த தீவுக் கூட்டங்களில் சிலவற்றை மட்டும் மலேசியா மற்றும் பிலிப்பன்ஸ் நாடுகள் உரிமை கோரி வருகின்றன. 

சிங்கப்பூரில் அதிகரிக்கும் பொருளாதார மந்தநிலை.. வெளிநாடு வாழ் இந்தியர்களின் கதி என்னவாகும்?

தெற்கு சீனக் கடலில் வடகிழக்குப் பகுதியில் அமைந்து இருக்கும் தி கிரேட் காலயான் தீவை பிலிப்பைன்ஸ் உரிமை கோரி வருகிறது. இங்குதான் பிலிப்பைன்ஸ் சுற்றுலா பயணிகளுக்கு கதவுகளை திறந்து விட்டு இருக்கிறது. இந்த சுற்றுலா பயணத்தில் சீன கடற்படை வீரர்களும், சீனாவுக்கு சொந்தமான கப்பல்களும் நுழைந்து நங்கூரம் இட்டதுதான் பிலிப்பைன்சுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இத்துடன், பிலிப்பைன்ஸ் தனக்கு சொந்தம் என்று கருதி வந்த தி கிரேட் காலயான் தீவில் இருந்துகொண்டு, ''சீனாவுக்கு உங்களை வரவேற்கிறோம்'' என்று ஒரு குறுஞ்செய்தியை பிலிப்பைன்ஸ் அதிகாரிக்கு சீன கடற்படையினர் அனுப்பியதுதான் இந்த செய்தியின் ஹைலைட்டாக மாறி இருக்கிறது. இந்த குறுஞ்செய்தியால் மீண்டும் சுதாரிக் கொண்டுள்ளது பிலிப்பைன்ஸ்.

இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பிலிப்பைன்ஸ் தற்போது போர்க்கொடி தூக்கினாலும், சீனா அசராமல் அந்த தீவில் தனது கப்பலை நிறுத்தியுள்ளது. இடத்தை காலி செய்யுமாறு பிலிப்பைன்ஸ் கூவி வந்தாலும் அதை கொஞ்சமும் லட்சியம் செய்யவில்லை சீனா. தற்போது இந்த இரண்டு நாடுகளும்  உரிமை கோரி வருவதால், சுற்றுலாப் பயணிகளும் இந்தத் தீவுக்கு வருவதை நிறுத்திக் கொள்ளலாம் என்ற அச்சமும் பிலிப்பைன்ஸ்க்கு ஏற்பட்டுள்ளது. 

சீன - அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஏழரை மணிநேரம் சந்திப்பு!

அமெரிக்காவின் பக்கம் பிலிப்பைன்ஸ் நெருங்க, நெருங்க சீனாவும் மணிலா (பிலிப்பைன்ஸ் தலைநகர்)வுக்கு தன்னால் முடிந்த அளவிற்கு நெருக்கடியை கொடுத்து வருகிறது. பிலிப்பைன்ஸ்க்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடந்த 2014ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் நான்கு கப்பல்களை நிறுத்திக் கொள்ள அமெரிக்காவுக்கு மணிலா அனுமதி அளித்து இருக்கிறது. இதையடுத்து நடப்பாண்டில் சீனா, பிலிப்பைன்ஸ் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. பிராந்தியத்தில் பதற்றமான சூழலை பிலிப்பைன்ஸ் உருவாக்கி வருகிறது என்று சீன தூதர் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் தங்களுக்கு சொந்தமான தீவில் ஓட்டல்கள் மற்றும் ரோடு அமைக்க வேண்டும், ராணுவ வீரர்கள் தங்குவதற்கான கட்டடங்களை கட்ட வேண்டும் என்று பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை வழங்கி வருகின்றனர். ஏற்கனவே தெற்கு சீனக் கடலை உரிமை கொண்டாடி வரும் சீனா தற்போது புது புயலைக் கிளப்பியுள்ளது.

click me!