
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், யூதர்களின் புனித பண்டிகையான 'ஹனுக்கா' (Hanukkah) வாழ்த்துப் பலகை பொருத்தப்பட்டிருந்த கார் ஒன்று மர்மமான முறையில் தீவைத்து எரிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெல்போர்னின் செயின்ட் கில்டா ஈஸ்ட் (St Kilda East) பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில், வியாழக்கிழமை அதிகாலை இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த காரின் மேற்கூரையில் "Happy Chanukah" என்ற வாழ்த்துப் பலகை வைக்கப்பட்டிருந்தது.
தீப்பிடித்தபோது கார் காலியாக இருந்ததால் நல்வாய்ப்பாக உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் இருந்த வீட்டில் வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
விக்டோரியா மாகாண காவல்துறை இந்தச் சம்பவத்தை "சந்தேகத்திற்குரிய தீ விபத்து" எனப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஒரு நபரை போலீசார் அடையாளம் கண்டுள்ளதாகவும், அவரைத் தீவிரமாகத் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்தச் செயலை "புரிந்து கொள்ள முடியாத தீய செயல்" என்று கண்டித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 14-ம் தேதி சிட்னியின் போண்டி பீச்சில் (Bondi Beach) நடைபெற்ற ஹனுக்கா விழாவில் நடந்த மிக மோசமான துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். அந்தத் துயரம் நடந்த சில நாட்களிலேயே தற்போது மீண்டும் ஒரு யூத எதிர்ப்புத் தாக்குதல் நடந்துள்ளது.
இதனால், இந்தச் சம்பவம் ஆஸ்திரேலிய யூதர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் மதகுரு (Rabbi) எஃபி பிளாக் இது குறித்துக் கூறுகையில், "இது தெளிவாக ஒரு யூத எதிர்ப்புத் தாக்குதல் (Antisemitic attack). கடவுளின் அருளால் மக்கள் யாரும் காயமடையவில்லை. ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடப்பது கவலையளிக்கிறது. மெல்போர்னில் வாழும் எங்கள் சமூகத்தினர் இப்போது தங்கள் சொந்த வீட்டிலேயே பாதுகாப்பற்ற உணர்வை எதிர்கொள்கின்றனர்," எனத் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய அரசு தற்போது வெறுப்புக் குற்றங்களுக்கு (Hate crimes) எதிரான சட்டங்களை மேலும் கடுமையாக்கி வருகிறது.