
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நாடே கொந்தளிப்பில் இருக்கும் போது 20 பேர் கொண்ட பீட்டா , விலங்குகள் நலவாஅரியத்தின் சில பேர் பேச்சை மட்டுமே கேட்டு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கடுமையாக் நடக்கும் பிரதமர் மோடிக்கு மத்தியில் கனடா பிரதமரும் , சிங்கப்பூர் பிரதமரும் தமிழர் பாரம்பரியத்தை போற்றுகின்றனர்.
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா அமைப்பு வழக்கு தொடுத்து தடை வாங்கியது , உச்சநீதிமன்றமும் தடை விதித்தது , இதனால் கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடக்கவில்லை இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என கடுமையான போராட்டங்கள் நடைபெற்றது.
ஆனால் கடைசிவரை அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்று அறிவித்த மத்திய அமைச்சர்கள் ஏமாற்றினர். இதனால் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களும் , இளைஞர்களும் , மாணவர்களும் தன்னெழுச்சியாக போராட்டத்தில் குதித்தனர்.
அவனியாபுரத்தில் நடந்த போராட்டத்தில் இளைஞர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.நேற்று பாலமேட்டில் போலீசார் முன் கூட்டியே குவிக்கப்பட்டு இளைஞர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். போலீசார் குவிக்கப்பட்டு போராட்டம் நடத்த முடியாத அளவுக்கு சூழ்நிலை ஏற்பட்டது. அலங்காநல்லூரு அடங்கா நல்லூரானது. ஆனாலும் போலீசாரின் குண்டாந்தடிகள் கொடூரமாக அவர்கள் மீது பாய்ந்தது.
தமிழர்கள் பாரம்பரியத்தின் அடியாளமான ஜல்லிக்கட்டை கொண்டுவர அவசர சட்டம் வேண்டும் என கோரிக்கை வைத்தனர் அரசியல் கட்சித்தலைவர்கள். ஆனால் மத்திய அரசும் பிரதமர் மோடியும் தமிழர்களின் அடையாளமான பொங்கல் பண்டிகை , ஜல்லிக்கட்டு பற்றி கண்டுகொள்ளவே இல்லை.
ஆனால் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்றைய தினம் காணொளி மூலம் தமிழர்களுக்கு தமிழில் பொங்கல் வாழ்த்து கூறி அசத்தினார். இந்நிலையில், தற்போது அவர் சிலம்பம் சுற்றும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு கனடா நாட்டு தமிழர்கள் நடத்திய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அவர் தமிழர்கள் பாரம்பரியத்தை வாழ்த்தி பேசுகிறார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில் அந்நாட்டு பிரதமர் லீ சியாங் லூங் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
சிங்கப்பூர் செங் சான் சமூக மன்றத்தின் சார்பாக நடைபெற்ற பொங்கல் விழாவில் அந்நாட்டு பிரதமர் கலந்து கொண்டார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாகக் கரகாட்டம், காவடியாட்டம் முதலியவற்றுடன் சிங்கப்பூரின் சிங்க நடனமும் நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்து கொண்ட பிரதமர் லீ சியாங் லூங், அங்குள்ள மக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்.
புருனை நாட்டில் விழா நடக்கிறது. சீன நாட்டு லீகுவான் மாநிலத்தில் நடந்த விழாவில் அங்குள்ள இந்தியர்கள் தமிழர்கள் கலந்து கொள்கின்றனர். அங்கு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசகங்கள் வைக்கப்பட்டு பீட்டாவை கண்டித்த பதாகைகளும் வைக்கப்பட்டது.
ஆனால் நமது பிரதமர் மோடிஜி நமது பாரம்பரியத்தை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் அவசர சட்டம் கொண்டுவரக்கூட மனமில்லாதவராக இருக்கிறார். இந்தியாவில் தமிழகம் ஒரு மாநிலம் 10 கோடி மக்கள் உள்ளனர் என்ற அக்கறை இல்லையே என்ற கோபம் ஒவ்வொரு இளைஞர்கள் எண்ணத்திலும் உள்ளது.
2019 பாராளுமன்ற தேர்தல் வராமலா போகும் என்று கேட்கிறார் போராட்ட களத்தில் உள்ள ஒரு இளைஞர்.