கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திடீர் ராஜினாமா! அடுத்த பிரதமர் யார்?

By SG Balan  |  First Published Jan 7, 2025, 12:29 AM IST

Canada PM Justin Trudeau resignation: ஒட்டாவாவில் செய்தியாளர் சந்திப்பில் ராஜினாமா அறிவிப்பை வெளியிட்ட ஜஸ்டின் ட்ரூடோ, புதிய லிபரல் கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை கனடாவின் பிரதமராகத் தொடர்வதாகவும் கூறினார்.


கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஒன்பது ஆண்டுகள் அந்நாட்டின் பிரதமராக பதவி வகித்துள்ள நிலையில், உள்நாட்டு அரசியல் நெருக்கடி காரணமாக இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்.

திங்கட்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, தனது பதவியை ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார். அதே நேரத்தில் தேர்தல் நடைபெற்று அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை இப்பதவியில் தொடர்வதாகவும் கூறியுள்ளார்.

Tap to resize

Latest Videos

"கட்சி தனது அடுத்த வலுவான தலைவரை, நாடு தழுவிய தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்த பிறகு, நான் கட்சித் தலைவர் பதவியையும், பிரதமர் பதவியையும் ராஜினாமா செய்ய விரும்புகிறேன்" என்று ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஒட்டாவாவில் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ட்ரூடோ, புதிய லிபரல் கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை கனடாவின் பிரதமராக நீடிப்பதாகவும் குறிப்பிட்டார். “…. நான் கட்சிக்குள்ளேயே போரிட வேண்டியிருந்தால், அந்தத் தேர்தலில் நான் சிறந்த தேர்வாக இருக்க முடியாது என்பது எனக்குத் தெளிவாகிவிட்டது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நமது கட்சிக்கும் நாட்டிற்கும் மிகவும் முக்கியமான விஷயங்களுக்காகப் போராடுவதில் இருந்து எப்போதும் பின்வாங்க மாட்டேன் என்று கூறிய ட்ரூடோ, கனடியர்களின் நலன்களுக்காவும் ஜனநாயகத்தின் நலனுக்காகவும் தான் இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார்.

நவம்பர் 2015 இல் கனடா நாட்டுப் பிரதமராகப் பதவியேற்ற ட்ரூடோ, அந்நாட்டில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர்களில் ஒருவர். தாராளமயக் கொள்கைக்காக ஆரம்ப கட்டத்தில் பாராட்டப்பட்டாலும், பணவீக்கம் அதிகரிப்பு , வீட்டுவசதி நெருக்கடி, வெளிநாட்டினர் குடியேற்றம் அதிகரிப்பு போன்ற பிற பிரச்சினைகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களிடையே அவருக்கு இருந்த செல்வாக்கு குறைந்து வருகிறது.

click me!