இந்தியாவுடன் நெருங்கிய உறவுக்கு கனடா உறுதி பூண்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்
வளர்ந்து வரும் பொருளாதார சக்தி மற்றும் முக்கியமான புவிசார் அரசியல் நாடான இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்குவதில் கனடா தீவிரமாக உள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஆனால், ஹர்தீப் சிங் நிஜார் கொலையில் கனடாவுடன் இந்தியா இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், இந்தியாவில் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையின் பின்னணியில் இந்திய அரசுக்கான தொடர்புகள் இருக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதனால், இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான உறவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், கனடாவின் குற்றச்சாட்டுக்ளை அபத்தமானது என கூறிய இந்தியா அந்நாட்டு தூதர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றியது. அதேபோல், கனடாவும் இந்திய தூதர்களை வெளியேற்றியது.
இந்தியாவுக்கு எதிரான 'நம்பகமான குற்றச்சாட்டுகள்' இருந்தபோதிலும், அதனுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்க கனடா உறுதிபூண்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாக தி நேஷனல் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
மாண்ட்ரியலில் செய்தியாளர்களை சந்தித்த ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவும் அதன் நட்பு நாடுகளும் உலக அரங்கில் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமாக தொடர்ந்து ஈடுபடுவது மிகவும் முக்கியமானது என்று தான் கருதுவதாக கூறினார்.
“இந்தியா வளர்ந்து வரும் பொருளாதார சக்தி மற்றும் முக்கியமான புவிசார் அரசியல் நாடு. மேலும், கடந்த ஆண்டு இந்தோ-பசிபிக் மூலோபாயத்தை நாங்கள் முன்வைத்தபடி, இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்குவதில் நாங்கள் மிகவும் தீவிரமாக இருக்கிறோம்.” என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
“அதே நேரத்தில், வெளிப்படையாக, சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாடாக, இந்த விஷயத்தின் (ஹர்தீப் சிங் நிஜார் கொலை) முழு உண்மைகளையும் நாங்கள் பெறுவதை உறுதி செய்ய இந்தியா கனடாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்,” எனவும் அவர் வலியுறுத்தியதாக தி நேஷனல் போஸ்ட் தெரிவித்துள்ளது.
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் அவசரக் கூட்டம்!
நிஜ்ஜார் கொலையில் இந்தியாவின் பங்கு குறித்து பகிரங்கமாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஆண்டனி பிளிங்கன், இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனான சந்திப்பின்போது எழுப்புவார் என்று அமெரிக்காவிடமிருந்து தனக்கு உத்தரவாதம் கிடைத்துள்ளதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஆனால், பிளிங்கன் மற்றும் ஜெய்சங்கர் இடையேயான சந்திப்பின்போது, இந்தியா-கனடா விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக அந்த சந்திப்பு குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்படவில்லை.
கனடா மண்ணில் கனடா குடிமகன் கொல்லப்பட்ட விவகாரத்தில் அமெரிக்கா தங்களுடன் இருப்பதாகவும், அனைத்து ஜனநாயக நாடுகளும், சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் அனைத்து நாடுகளும் இதனை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார்.