தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபடுத்திக் கொள்ள இந்திய வம்சாவளியினருக்கு அழைப்பு : 1 லட்சம் பேருக்கு பரிசோதனை.

By Ezhilarasan Babu  |  First Published Aug 18, 2020, 5:18 PM IST

பரிசோதனையில் அனைத்து தரப்பினரும் கலந்து கொள்வதன் மூலம் தடுப்பூசி அனைவருக்கும் பயனுள்ளதாக இருப்பதை உறுதி செய்ய முடியும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 


covid-19க்கு எதிரான தடுப்பூசி உருவாக்குவதற்கான மருத்துவ பரிசோதனைகளில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு இந்திய வம்சாவளி சிறுபான்மையின சமூகங்களை  சேர்ந்தவர்களுக்கு இங்கிலாந்து அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இதற்காக குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி, மற்றும் உருது மொழிகளில்  விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.  பல்வேறு  சமூகங்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் இந்த ஆட்சேர்ப்பு திட்டத்தில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும், இந்த வைரஸ் கட்டுக்கடங்காமல் மக்களை கொத்துக் கொத்தாக தாக்கி வருகிறது. கொரோனாவுக்கு எதிராக பிரத்யேக தடுப்பூசி வந்தால் மட்டுமே இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியும் என ஒட்டுமொத்த உலக நாடுகளும் தடுப்பூசி எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. இந்நிலையில் உலகம் முழுதும் அதற்கான ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இங்கிலாந்தில் தடுப்பூசி ஆராய்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 

Tap to resize

Latest Videos

இங்கிலாந்து முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி பரிசோதனை  செய்யும் பிரமாண்ட திட்டம் தொடங்க உள்ளது. இந்நிலையில் தடுப்பூசி பரிசோதனை செய்வதற்கான ஆட்சேர்ப்பு  நடவடிக்கையில் இங்கிலாந்து அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது, அதன் ஒரு பகுதியாக இந்த தடுப்பூசி பரிசோதனையில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களும், சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்தவர்களும், கலந்து கொள்ள வேண்டுமென அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான, பயனுள்ள மற்றும் பாதுகாப்பான தடுப்பூசியை உருவாக்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகவே இது கருதப்படுகிறது. இங்கிலாந்து மக்கள் தொகையில் சில பிரிவுகளின் பங்களிப்பு குறைவாக உள்ளது, எனவே இதில் அனைத்து தரப்பினரையும் பங்குபெற வைக்கும் வகையில் பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இதில் இன சிறுபான்மையினர், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு தொழிலாளர்களுக்கு தடுப்பூசி பரிசோதனையில் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. 

பரிசோதனையில் அனைத்து தரப்பினரும் கலந்து கொள்வதன் மூலம் தடுப்பூசி அனைவருக்கும் பயனுள்ளதாக இருப்பதை உறுதி செய்ய முடியும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பிரிட்டனின் வணிகத்துறை அமைச்சர் அலோக் சர்மா, தடுப்பூசி ஆராய்ச்சியை துரிதப்படுத்த அனைத்து பின்னணியினரும், வயதினரும் ஆயிரக்கணக்கான மக்களும் இதில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும்  தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தடுப்பூசி பரிசோதனையில் 1 லட்சம் பேர் ஈடுபட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தடுப்பூசி பணி குழுவின் தலைவர் கேட் பிங்காம் கூறுகையில்,  எங்களுக்கு வெவ்வேறு பின்னணியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தேவைப்படுகின்றனர், இதனால்  மக்களைப் பாதுகாக்கும் ஒரு தடுப்பூசியை விரைவாக உருவாக்க முடியுமா என்பதை எதிர்காலத்தில் அறிந்துகொள்ள முடியும் என்றார். இந்த தொற்று நோயின் முடிவு என்பது, இதனால்  உயிரிழப்பவர்களை காப்பாற்றுவதில் மூலம் முடிவுக்கு கொண்டுவர முடியும் என அவர் கூறியுள்ளார்.

 

click me!