இந்தியாவை புகழ்வதில் ஓபாமா நேரம் செலவழிக்க வேண்டும் என ஜானி மூரே தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி 4 நாட்கள் அமெரிக்கா பயணம் சென்று திரும்பியுள்ளார். பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது இந்தியாவின் ஜனநாயகம், பத்திரிகை சுதந்திரம் குறித்து பெரிதும் பேசப்பட்டது. வெள்ளை மாளைகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கூட, பிரதமர் மோடியும், அதிபர் ஜோ பைடனும் இதுபற்றி பேசினர்.
இந்த பேட்டிக்கு முன்னதாக, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்திருந்தார். அதில், “இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரின் பாதுகாப்பு பிரச்சினை குறித்து பிரதமர் மோடியுடன் ஜோ பைடன் பேச வேண்டும். பிரதமர் மோடியுடன் நான் பேசியிருந்தால், இதுகுறித்து விவாதித்திருப்பேன்.” என்றார்.
ஒபாமாவின் இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது போல கருத்து தெரிவித்தது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்தக் கருத்து கண்டிக்கத்தக்கது. அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோதுதான் 6 இஸ்லாமிய நாடுகள் மீது வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. பிரதமருக்கு 13 வெளிநாடுகள் விருது வழங்கி உள்ளன. இதில் 6 இஸ்லாமிய நாடுகள்.” என்று கண்டனம் தெரிவித்தார்.
6 இஸ்லாமிய நாடுகள் மீது 26,000 குண்டுகளைப் போட்டது ஒபாமா: நிர்மலா சீதாராமன் பதிலடி
இந்த நிலையில், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இந்தியாவை விமர்சிப்பதை விட புகழ்வதில் தனது ஆற்றலைச் செலவிட வேண்டும் என சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் முன்னாள் ஆணை ஜானி மூரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தியாவை விமர்சிப்பதை விட இந்தியாவைப் புகழ்வதில் தனது ஆற்றலை முன்னாள் அதிபர் ஒபாமா செலவிட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மனித வரலாற்றில் இந்தியா மிகவும் பன்முகத்தன்மை கொண்ட நாடு. இந்தியாவின் பன்முகத்தன்மை அதன் பலம். பிரதமர் மோடியுடன் சிறிது நேரம் செலவிட்டதன் காரணம் எனக்கு நிச்சயமாக அது புரிகிறது.” என்று தெரிவித்துள்ளார்.