
ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளிக்கும் வகையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தயாரித்த மிருக வதை தடை சட்ட திருத்த வரைவு மசோதாவுக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. எனவே இந்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், எனவே இந்த போட்டிக்கு தடை விதிக்கவேண்டும் என்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 2014–ம் ஆண்டு மே 7–ந்தேதி, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடைவிதித்து தீர்ப்பு வழங்கியது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடக்கவில்லை.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி கடந்த ஆண்டு மத்திய அரசை தமிழக அரசு வற்புறுத்தியது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மற்றும் மாட்டு வண்டி போட்டிகளை நடத்த மத்திய அரசு இந்த கடந்த ஜனவரி 7–ந்தேதி அனுமதி வழங்கியது. இதுதொடர்பான அறிவிக்கையை மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டது.
ஆனால் அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அடுத்த 5 நாட்களில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடைக்கால தடை விதித்தது. இதனால் கடந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு அமைப்புகளும், பல்வேறு அரசியல் கட்சிகளும், ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் நடத்தும் வகையில் தமிழக அரசும் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு கட்டாயம் நடக்கும் மத்திய அரசு அதற்கான நடவடிக்கை எடுக்கும் என பொன் ராதாகிருஷ்ணன் , தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தொடர்ச்சியாக கூறி வந்தனர்.
ஆனால் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் ரோசரிந்தன் நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு ஜல்லிக்கட்டு குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது.
தமிழக அரசின் மனு ஏற்கத்தக்கதல்ல என்று மனுவில் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு சார்பில் காளைகள் விவகாரம் மதம் ,கலாச்சாரம் சார்ந்த விஷயம் என வாதிட்டதை நீதிபதிகள் ஏற்க மறுத்து சட்டப்பிரிவு 25 ன் படி காளைகள் வீட்டு உபயோகம் மற்றும் விவசாயத்துக்கு மட்டுமே அது காட்சிப்பொருள் அல்ல என்று தெரிவித்தார்.
ஆகவே தமிழக அரசின் சீராய்வு மனு ஏற்கத்தக்கதல்ல என தெரிவித்து தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.
இதைத்தவிர ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் உட்பட 11 வழக்குகளை ஒன்றாக சேர்த்து உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. அதன் விசாரணையை டிச 1 அன்று நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.