
முஸ்லிம்களின் புனித தலமான மெக்கா மசூதி குறித்து பேஸ்புக்கில் அவதூறு பரப்பியதைக் கண்டித்து நடந்த பேரணியின்போது, வங்காளதேசத்தில் 15 இந்துக் கோயில்கள், இந்துக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், பெரும் பதற்றம் ஏற்றப்பட்டுள்ளது.
இது குறித்து வங்காளதேசத்தில் இருந்து வெளிவரும் ‘டெய்லி ஸ்டார்’ நாளேட்டில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்படுவதாவது:
மெக்காவில் உள்ள புனித மசூதி குறித்து விஷமிகள் சிலர் பேஸ்புக்கில் அவதுறாக கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர். இதைக்கண்டித்து பிரம்பன்பாரியா மாவட்டம், நசிர்நகர் பகுதியில், ஹிபாஜத் - இ- இஸ்லாம் அமைப்பின் சார்பில் நேற்று முன் தினம் இரு பேரணிகள் நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கானவர்கள் அந்த பேரணியில் கலந்துகொண்டனர். அப்போது பேரணியில் வந்தவர்கள் பேஸ்புக்கில் எழுதியவர்களைக் கண்டுபிடித்து தூக்கிலிட வேண்டும் என கோஷமிட்டனர்.
அப்போது, திடீரென நகரில் இருந்த இந்துக் கோயில்கள், மற்றும் இந்துக்கள் வீடுகளை குறிவைத்து பேரணியில் வந்தவர்கள் தாக்குதல் நடத்தி, சூறையாடினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்புக்காக வந்த போலீசார் மட்டுமின்றி கூடுதல் போலீசாரும் வரவழைக்கப்பட்டு, பேரணியல் வந்தவர்களை அடித்து விரட்டி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இது குறித்து பிரம்மன்பாரியா போலீஸ் சூப்ரென்டு மிசானுர் ரஹ்மான் கூறுகையில், “பேரணியில் வந்தவர்களில் 100 முதல் 200 பேர் திடீரென இந்துக்கோயில்கள், வீடுகள் மீது தாக்குதல் நடத்தினர். இது 5 கோயில்களில் உள்ள சிலைகள் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் 2 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்று தெரிவித்தார்.
பிரம்மன்பாரியா பூஜா குழுவின் பொதுச்செயலாளர் கெயில்பாடா படா கூறுகையில், “ இந்த தாக்குதலில் இந்துக்கள் வழிபாடு நடத்தும் 15 கோயில்கள் சேதமடைந்துள்ளன. 200-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன'' எனத் தெரிவித்தார்.