சீனாவில் இருந்து இந்தியாவிற்கு நகர்கிறது ஆப்பிள் நிறுவனம்! அடிச்சித் தூக்கும் இந்தியா.. அதிர்ச்சியில் சீனா..!

By Manikandan S R SFirst Published May 12, 2020, 9:07 AM IST
Highlights

இந்தியாவில் விற்பனை நிலையங்களையும் திறக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. இதுவரை ஆப்பிள் நிறுவனத்திற்கு சொந்தமாக இந்தியாவில் ஷோரூம்கள் இல்லை. அதன்படி தற்போது நடந்து வரும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் 2021ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் ஷோரூமை திறக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்க முடியாத அளவுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கும் கொடிய கொரோனா வைரஸ் நோய் ஒட்டு மொத்த உலக பொருளாதாரத்தையும் புரட்டிப் போட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் முதன்முதலாக சீனாவில் பரவி அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பியிருக்கும் நிலையில் தற்போது அந்நாட்டில் இருந்து வெளியேற பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் மும்முரமாக இருக்கின்றன. அதன்படி சீனாவில் ஐபோன் உற்பத்தி செய்துவரும் ஆப்பிள் நிறுவனம் அதில் ஐந்தில் ஒரு பகுதி உற்பத்தியை இந்தியாவில் மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறது. இதன் காரணமாக எதிர்காலத்தில் இந்தியாவில் முதலீடு மற்றும் உற்பத்திக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறும்போது, இந்தியாவில் இருக்கும் நிறுவனங்களுடன் ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் ஐபோன்களை தயாரித்து வருகிறது. இந்த நிலையில்தான் சீனாவிலிருந்து பெரிய அளவில் உற்பத்தியை இடமாற்றம் செய்ய அந்நிறுவனம் முடிவு எடுத்திருக்கிறது. இதுதொடர்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடந்து இருக்கும் நிலையில் மத்திய அரசு அறிவித்திருக்கும் சலுகைகளை பயன்படுத்திக்கொள்ள ஆப்பிள் நிறுவனம் ஆர்வமாக இருக்கிறது. ஏற்கனவே ஆப்பிளின் ஒப்பந்த நிறுவனங்களான பாக்ஸ்கான், விஸ்ட்ரான் ஆகியவை ஆப்பிள் ஸ்மார்ட் போன்களையும் பிற பொருட்களையும் தயாரித்து வருகின்றன. அந்நிறுவனங்களை பயன்படுத்தி அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 4,000 பில்லியன் டாலர், அதாவது சுமார் 3,04,000 கோடி மதிப்பிலான ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

இது மட்டுமின்றி இந்தியாவில் விற்பனை நிலையங்களையும் திறக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. இதுவரை ஆப்பிள் நிறுவனத்திற்கு சொந்தமாக இந்தியாவில் ஷோரூம்கள் இல்லை. அதன்படி தற்போது நடந்து வரும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் 2021ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் ஷோரூமை திறக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவுதல் மட்டுமின்றி தற்போது அமெரிக்கா-சீனா இடையே நிகழ்ந்து வரும் மோதல் போக்கு காரணமாகவும் ஆப்பில் நிறுவனம் இம்முடிவை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

click me!