இந்திய-சீன எல்லை விவகாரம் குறித்து மோடியுடன் ட்ரம்ப் உரையாடல்..!! ஜி7 மாநாட்டிற்கு அழைப்பு..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 3, 2020, 7:18 PM IST
Highlights

இருவரும் சுமார் 25 நிமிடங்கள் உரையாடியதாக  அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 

இந்திய-சீன எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் நடைபெற உள்ள ஜி-7 உச்சி மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசியில், பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அப்போது அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியும் இந்திய-சீன எல்லை விவகாரம் குறித்து 25 நிமிடங்கள் உரையாடியதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் ஒட்டுமொத்த உலக நாடுகளும் சீனாவுக்கு எதிராக திரும்பியுள்ள நிலையில், அதை திசை திருப்பும் நோக்கில் சீனா, இந்திய எல்லையில்  படைகளை குவித்து பதற்றத்தை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில் சீன ராணுவத்திற்கு எதிர் நடவடிக்கையாக இந்தியாவும் ராணுவத் துருப்புகளை எல்லைகள் குவித்து, சீனாவை கண்காணித்து வருகிறது. 

கடந்த 20 நாட்களுக்கும்  மேலாக ராணுவ மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் எல்லை விவகாரத்தில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. ஏற்கனவே, தென் சீனக் கடல் பகுதி மற்றும் தைவான் நீரிணைப்புகளில் அமெரிக்க கடற்படை ரோந்து பணிகளை மேற்கொண்டதால், சீனா- அமெரிக்கா இடையே ராணுவ மோதல் இருந்துவருகிறது. அதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று விவகாரம் இரு நாட்டுக்கும் இடையேயான பகையை மேலும் கூர்மையாக்கி உள்ளது.  இந்நிலையில் இந்தியா எல்லையில் சீனா, படைகளை குவித்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையில் சமரசம் செய்து வைக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த நிலையில், இந்தியா அதை நாசுக்காக புறக்கணித்து விட்டது.  சீனாவும் அதை ஏற்க மறுத்துவிட்டது. இந்நிலையில் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மோடிக்கு அழைப்பு விடுக்க அதிபர் ட்ரம்ப் தொலை பேசியில் அழைத்த நிலையில், இருவரும் சுமார் 25 நிமிடங்கள் உரையாடியதாக  அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 

அப்போது கொரோனாவுக்கு எதிரான போரில் இரு தலைவர்களும் பரஸ்பர ஒத்துழைப்பு அளிப்பது பற்றி பேசியதுடன், ஜி 7 நாடுகளின் எண்ணிக்கையை  அதிகப்படுத்துவது, அதில் இந்தியாவை உறுப்பினராக்குவது குறித்த தனது விருப்பத்தை ட்ரம்ப் வெளிபடித்தியதாகவும், அதற்கு மோடி தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் கொரோனாவுக்கு  பிந்தைய காலத்தில் இதுபோன்ற வலுவான அமைப்பு தேவை என்றும், இந்த மாநாட்டின் வெற்றிக்கு அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கும்  விஷயம் என்றும், மோடி கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இரு நாடுகளில் கொரோனா நிலைமை மற்றும் உலக சுகாதார அமைப்பில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் போன்றவை குறித்து விவாதித்ததாகவும், கிழக்கு லடாக் அருகே இந்திய-சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!