அமெரிக்க அதிபராக டிரம்ப்- இந்திய சாப்ட்வேர் துறைக்கு சாதகமா அல்லது பாதகமா?

Asianet News Tamil  
Published : Nov 10, 2016, 10:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
அமெரிக்க அதிபராக டிரம்ப்-  இந்திய சாப்ட்வேர் துறைக்கு சாதகமா அல்லது பாதகமா?

சுருக்கம்

நியூபாஸ்ட் ஒரு விரிவான அலசல்….

கோபக்காரர், இனவெறிபிடித்தவர்,  தேர்ந்த வியாபாரி, 18 மாத அரசியல் அனுபவம் மட்டுமே கொண்டவர் இப்படித்தான் அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்பை அடையாளப்படுத்திக் காட்ட முடிகிறது.

டிரம்பின் வெளியுறவுக்கொள்கை இதுதான், இவரின் குணம் இப்படித்தான் என எந்த நாட்டு ஊடகங்களும்  உறுதியாக கூற முடியாத அளவுக்கு புதிர் நிறைந்த, குழப்பமான மனிதர் டொனால்ட் டிரம்ப் என்றால் மிகையாகாது. அதனால்தான் என்னவோ ஐரோப்பாவில் இருந்து ஆசியா நாடுகள் வரை டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் கையைப் பிசைந்து கவலையில் ஆழந்துள்ளன.

இந்தியாவும்-அமெரிக்காவும் அதிபர் ஒபாமாவின் காலத்தில் சிறந்த நட்பு நாடுகளாக இருந்தன.ஆனால், அப்போது எதிர்க்கட்சியான குடியரசுக்கட்சியின் வேட்பாளர் டிரம்ப் இப்போது அதிபராக வந்துள்ளதால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏதும் இருக்குமா என்ற சந்தேகம் தற்போது அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.

கடந்த ஓர் ஆண்டாக ஹிலாரி கிளிண்டனுக்கும், டிரம்புக்கும் இடையே கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டபோதெல்லாம் டிரம்பின் வெளியுறவுக்கொள்கைகள் முற்றிலும் வித்தியாசமாக, அமெரிக்கா நலன் சார்ந்ததாகவே இருந்தது. இன்னும் குறிப்பாகக் கூறவேண்டுமென்றால், தீவிர வலதுசாரி கொள்கை கொண்டதாக இருந்தது.

இந்தியாவைப் பொருத்தவரை மும்பையில் டிரம்பின் ஓட்டல் திறப்பு விழாவுக்கு டிரம்ப் வந்தபோது கூட இந்திய வெளியுறவு அதிகாரிகள் யாரும் அவருடன் நெருங்கி உறவாடவில்லை. ஆதலால், அவரின் கொள்கை குறித்து தெளிவாகக் கருத்துக் கூறவிரும்பவில்லை.  

அதன் காரணமாகவோ என்னவோ அமெரிக்கத் தேர்தல் பிரசாரம் தொடங்கியவுடன், பாரதிய ஜனதா தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியசாமிக்கு அழைப்பு விடுத்தார் டிரம்ப். ஆனால் அங்கு செல்லாமல் சாமி கடைசிவரை தவிர்த்து வந்தார்.

கடந்த மாதம் ஒரு ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டி அளித்த சுப்பிரமணியசாமி, அமெரிக்காவின் சூழலைப் பார்க்கும் போது டிரம்புக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் இருப்பதாக கணித்தார். அதேசமயம், ஹிலாரி மிகவும் மோசமான அதிபர் வேட்பாளர் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

அதுமட்டுமல்லாமல் டிரம்ப் எப்போது முஸ்லிம் அமைப்புகளுக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கினாரோ அப்போது இருந்து, இந்தியாவில் உள்ள ஒரு சில இந்து அமைப்புகள் அவரை கொண்டாடத் தொடங்கிவிட்டன.

அதற்கு ஏற்றார்போல், அமெரிக்காவில் இந்துக்களின் தீபாவளி பண்டிகை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய டிரம்ப், அமெரிக்க கலாச்சாரத்துக்கும், உலக நாகரீகத்துக்கும் சிறப்பான பங்களிப்பை செய்து இருக்கிறார்கள் என ஏகத்துக்கும் புகழ்ந்து பேசினார். இவை அனைத்தும் டிரம்ப் தீவிர வலதுசாரி கொள்கையில் நம்பிக்கை கொண்டவர் என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

டிரம்பின் தேர்தல் பிரசாரப் பேச்சுக்களில் மிக முக்கியமானது, முஸ்லிம்களுக்கு தடைவிதிக்க வேண்டும், தீவிரவாதத்துக்கு எதிரான கடுமையான நிலைப்பாடு, மற்றும் அகதிகளைத் தடுப்பது, அமெரிக்க வேலைவாய்ப்பு அமெரிக்கர்களுக்கே என்ற கோஷத்தை முன்வைத்தே இருந்து.

ஆதலால், டிரம்ப் அதிபர் பதவி ஏற்கும் போது, தீவிரவாதத்துக்க எதிராக கடுமையான நிலைப்பாட்டை அவர் எடுப்பார் என்ற போதிலும், அமெரிக்க வேலைவாய்ப்பில் அடுத்த நாட்டவர்களை துரத்தும் நோக்கில் முடிவெடுத்தால் அது இந்தியாவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் . குறிப்பாக சாப்ட்வேர் துறையில் பணியாற்றுவோர்களுக்கு வழங்கப்படும் எச்1பி விசாவில் கைவைக்கும்  போது, சிலிக்கான் வேலியில் உள்ள இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

குடியேற்ற விஷயத்திலும் டிரம்ப் கடினமான விதிமுறைகளை பின்பற்றுவேன் என கூறியிருப்பதால், அமெரிக்காவில் படிக்கும் ஏராளமான இந்திய மாணவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். ஜிமேட், ஜிஆர்இ ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அமெரிக்காவில் கல்வி கற்கும் திட்டத்துக்கும் பாதிப்பு ஏற்படும்.

அதேசமயம், அணுஆயுதம் வைத்திருக்கும் 8 நாடுகளில் இந்தியாவும் ஒரு நாடு என்பதால், இந்தியாவுடன் தற்போதுள்ள நட்புறவை தொடர்ந்து மேலும், வலுப்படுத்த முனைவார்.

அமெரிக்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் மீரா சங்கர், டிரம்ப் வெளியுறவுக்கொள்கை குறித்துக் கூறுகையில், சர்வதேச வர்த்தகச் சூழல் எப்போதும் அமெரிக்காவுக்கு சாதகமாகஇல்லை என்ற சிந்தனையுடன் இருப்பவர் டிரம்ப். ஆனால், அதிரஷ்டவசமாக இந்தியா, குடியரசு, ஜனநாயகக்கட்சிகளுடன் நல்ல நட்புறவை வளர்த்து வருவது ஒருவிதத்தில் சாதகமான விஷயமே என்றார்.

அதேசமயம், சி.என்.என். சேனலின் மூத்த ஆசிரியர் ராம் ராம்கோபால் கூறுகையில், டிரம்ப் வெளியுறவுக் கொள்கையின்படி, இந்தியாவின் சாப்ட்வேர் பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும்படி குடியேற்ற கொள்கைகளையும், எச்1பி விசா தி்ட்டத்தை மாற்றி உருவாக்கமுடியும் என்றாலும், அதற்கு நாடாளுமன்றத்தில் முழுமையாக ஒப்புதல் பெறமுடியாமல் அதை செயல்படுத்த முடியாது. டிரம்பின் சித்தாந்தங்கள் எந்த அளவுக்கு இந்தியாவுடன் ஒத்துப்போகிறது என்பது போகபோகவே தெரியும் என்றார்.

பாதங்கள்…

1.   டிரம்பின் முந்தைய குடியுரிமை விவாரத்தில் அவர் விடுத்த அறிக்கையை பார்க்கும்போது, சாப்ட்வேர் பணியாளர்கள் அதிகம் பயன்படுத்தும் எச்.1பி விசா, மற்றும் இந்தியர்கள் குடிேயற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

2.   இந்தியாவில் செயல்படும் பி.பி.ஓ. மற்றும் சாப்ட்வேர் நிறுவனங்கள் பெரிய பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும். இதனால் ஆட்குறைப்பு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம்.

3.   ஜி.ஆர்.இ. மற்றும் ஜிமேட் தேர்வு மூலம் அமெரிக்காவுக்குள் கல்வி கற்கும் இந்திய மாணவர்கள் முயற்சி தடுக்கப்படும்.

4.   தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியவும் பங்கெடுத்தால்தான், இந்தியர்களுக்கு சாதகமான விஷயங்களை செயல்படுத்துவேன் எனக்கூறி, அமெரிக்க கூட்டுப்படையுடன் இந்திய ராணுவத்தையும் சேர்க்க வற்புறுத்தப்படலாம்.

5.   இந்தியாவுக்குள் அன்னிய முதலீடு வருகையில் பெரிய அளவில் தேக்கம் ஏற்படலாம். சில நேரங்களில் குறைந்து சந்தையில் பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தும். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியையும் சந்திக்கலாம்.

6.   டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடுமையாகவீழ்ச்சி அடையும் போது, இந்தியப் பங்குச்சந்தைகள் பெரிய அளவுக்கு பாதிப்பை எதிர்கொள்ளும்.


சாதகங்கள்

1.  பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா தீவிரமாக எடுக்கும் பட்சத்தில் இந்தியாவுக்கு சாதகமாக ராணுவ உதவி, தொழில் நுட்ப உதவிகளை செய்து, இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும்.

2.  சீனாவுக்கும், சீனப்பொருட்களுக்கும் எதிராக டிரம்ப் பேசிவருவதால், சீனாவுக்கு எதிராக நிலைப்பாடு எடுக்கும் போது, இந்தியாவுக்குஆதரவாக அவர் செயல்படுவார். இதனால், இரு நாடுகளுக்கு இடையே நட்புறவு வலுவடையும்.

3.  ரஷிய அதிபர் புதினுடன், டிரம்ப் நல்ல நட்பை வளர்த்துவருகிறார். இந்தியாவும் ரஷியாவும் சிறந்த நட்பு நாடுகள் என்பதால், சர்வதேச அளவில் இந்த மூன்று நாடுகளும் வலிமையான அமைப்பை உருவாக்க முடியும்.

PREV
click me!

Recommended Stories

கொடூரம்.. தொழுகையில் ஈடுபட்ட பாலஸ்தீனியர் மீது வாகனத்தை ஏற்றிய இஸ்ரேலிய வீரர்!
கனடாவில் பயங்கரம்! டொராண்டோவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை!