வாஷிங்டன், நவ.10- உலகமே எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தலில் தலைகீழான முடிவுகள் நேற்று வெளிவந்தன. ஹிலாரி கிளிண்டன் வெல்வார் என கருத்துக்கணிப்புகள் கூறிய நிலையில், அனைத்தையும், நொறுக்கி, டிரம்ப் வெற்றி பெற்றார். வெள்ளை அலை... மத்திய மேற்கு மாநிலங்களாக ஒஹியோ, புளோரிடா, நார்த் கரோலினா ஆகிய அனைத்தும் பெருமளவு ஹிலாரிக்கு கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிரம்புக்கு ஆதரவாக மாறின. அதுதான், ஹிலாரி கிளிண்டனின் பாதுகாப்பு அரணைத் தகர்த்தெறிந்தது.கடந்த 12 ஆண்டுகளாக இந்த மாநிலங்கள், ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாகவே இருந்தன. கறுப்பினத்தவர் மற்றும் வெள்ளையின உழைக்கும் வர்க்கம் அவர்கள் பக்கம் இருந்தது.அந்த வெள்ளையின உழைக்கும் வர்க்கம், குறிப்பாக கல்லூரிப் படிப்பு இல்லாத ஆண்களும் பெண்களும், இந்த முறை ஜனநாயகக் கட்சியைக் கைவிட்டார்கள். கிராம மக்கள் பெருமளவில் திரண்டு வாக்களித்தார்கள். கடலோரப் பகுதியில் உள்ள செல்வந்தர்கள் மற்றும் ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டதாக அவர்கள் அதிருப்தியடைந்திருந்தார்கள். இப்போது தங்கள் குரலை ஒலிக்கச் செய்திருக்கிறார்கள்.விர்ஜினியா, கொலராடோ, விஸ்கான்சின் ஆகியவை டிரம்புக்கு ஆதரவாக சாய்ந்தபோது, ஹிலரியின் நம்பிக்கை தகர்ந்தது.அசையாத நம்பிக்கைதொடக்கத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய பேச்சுக்கள், முஸ்லிம்மக்களுக்கு எதிரான கருத்து, மெக்சிக்கோ மக்களுக்கு எதிரான இனவெறிப் பேச்சு, பெண்களை மதிக்காத மனோபாவம் ஆகியவற்றால் டிரம்ப் ஊடகங்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். குறிப்பாக தேர்தல் நேரத்தில் செக்ஸ் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகி, போட்டியில் இருந்தே விலகிவிடும் சூழல் டிரம்புக்கு நிலவியது. ஆனால், அனைத்தையும் தனது அசையாத நம்பிக்கையால் உடைத்து எறிந்து இறுதிவரை போராடியது வெற்றிக்கு காரணமாகும். மனதை அறிந்தவர்...ஜனநாயகக் கட்சியினருக்கு எதிராகவும், தனது கட்சிக்குள்ளே இருக்கும் பல பெரிய தலைகளையும் எதிர்த்து வேட்பாளர் தேர்தல் களத்தில் இருந்தே டிரம்ப் கடுமையாக எதிர்த்தார். மற்றவர்களைக் காட்டிலும் தனது பிரசார உத்தியை மாற்றி, அமெரிக்க வேலைவாய்ப்பு அமெரிக்கர்களுக்கே என்று பேசினார். வேட்பாளர் தேர்தலில் ஒவ்வொரு சுற்றிலும் தனது சக போட்டியாளர்களை விரட்டி, தனது போராட்ட குணத்தை டிரம்ப் வெளிப்படுத்தினார். குறிப்பாக அமெரிக்க மக்களின் மனதை அறிந்து வைத்து அவர் செய்த பிரசாரம் பலன் அளித்துள்ளது. டிரம்புக்கு சாதகமான மின்னஞ்சல்ஹிலாரி வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது தனிப்பட்ட சர்வரில் அரசு மின்னஞ்சல்களை பயன்படுத்திய விவகாரம் தேர்தல் பிரசாரத்தில் முதல் எழுந்து பின் அடங்கியது. ஆனால், தேர்தலுக்கு இரு வாரங்கள் இருக்கும் போது, எப்.பி.ஐ. இயக்குநர் ஜேம்ஸ் கோமே மின்னஞ்சல் விவகாரத்தை கிளப்பி மீண்டும் விசாரிக்கப்போவதாக தெரிவித்தவுடன் அதை டிரம்ப் கெட்டியாகப் பற்றி வலிமையான விமர்சனங்களை ஹிலாரிக்கு எதிராக முன் வைத்தார். இது மக்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மின்னஞ்சல் விவகாரத்தில் இருந்து ஹிலாரி விடுபட்டபோதிலும், தோல்வி வலையில் சிக்கிக்கொண்டார். வித்தியாமான அணுகுமுறை..தேர்தல் பிரசாரம் ஒவ்வொன்றிலும் தனது வித்தியாசமான அணுகுமுறையால் மக்களைக் கவர்ந்தார் டிரம்ப். அமெரிக்கர்களுக்கான வேலைவாய்ப்பு, பாதுகாப்பு, ராணுவம் பலம், தீவிரவாத தாக்குதல், பொருளாதார வளர்ச்சி என இவரின் வித்தியாசமான திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுக்கொடுத்தன. குறிப்பாக ஜனநாயகக்கட்சி வேர்பிடித்து வளர்ந்த விஸ்கான்சின், மிச்சிகன் ஆகிய மாநிலங்களில் குடியரசுக் கட்சி நெருங்கவே முடியாது என்று இருந்தது. ஆனால், அந்த மாநிலங்களில் பேரணி நடத்தி, தனது பலத்தை நிரூபித்தார். டிரம்பின் பேரணி குறித்து கிண்டல்கள் , கேலிகள் வந்தபோதிலும், அதை பொருட்படுத்தால் அவர் வகுத்த உத்திகள் அவருக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தன.