கொரோனாவுக்கு தடுப்புமருந்து எப்போது தயாராகும் என்பதை கூற முடியாது..! அமெரிக்க மருந்துகள் நிர்வாக ஆணையர் அதிரடி

By Ezhilarasan BabuFirst Published Jul 7, 2020, 11:02 AM IST
Highlights

தடுப்பு மருந்து உருவாக்கும் பணி அதிக வேகத்துடன் நடைபெற்று வருகிறது இருப்பினும் அது எப்போது  கிடைக்கும் என்பது தெரியவில்லை என அவர் கூறினார். 

கொரோனா வைரஸ் தடுப்புமருந்து எப்போது தயாராகும் என்பதை தன்னால் கூற முடியாது என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாக ஆணையர் ஸ்டீபன் ஹான் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்புமருந்து தயாராகும் என தெரிவித்திருந்த நிலையில், ஸ்டீபன் ஹான் இவ்வாறு கூறியுள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது, இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் ஒரு கோடியே 10 லட்சத்தையும் கடந்தும் அதன் தாக்குதல் மிகதீவிரமாக உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் இந்த வைரசுக்கு இதுவரை 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அங்கு இதுவரை 20 லட்சத்து 80,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த வைரசுக்கு பிரத்தியேக தடுப்பூசி வந்தால் மட்டுமே இதை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவர்கள் தடுப்பூசி எதிர்நோக்கி காத்திருக்கின்றனர், இதற்கான மருந்து ஆராய்ச்சியில் உலக அளவில் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் மருந்து ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து எப்போது தயாராகும் என்பதை தன்னால் தற்போதைக்கு கூற முடியாது என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாக ஆணையர் ஸ்டீபன் ஹான் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகையின் கொரோனா நோய் தடுப்புபடையின் உறுப்பினராகவும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாக ஆணையராகவும் உள்ள ஸ்டீபன் ஹான் அதிபர் ட்ரம்ப்பின் கருத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளார். இது குறித்து அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர்,

 

தடுப்புமருந்து உருவாக்கம் என்பது தரவுகளையும் அறிவியலையும் பொருத்தது, தடுப்பு மருந்து மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு வைரஸ் உடன் போராடுவதற்கு ஏற்றவாறு பயிற்சி அளிக்கும் எனவும் அவர் கூறினார். தடுப்பு மருந்து உருவாக்கும் பணி அதிக வேகத்துடன் நடைபெற்று வருகிறது இருப்பினும் அது எப்போது  கிடைக்கும் என்பது தெரியவில்லை என அவர் கூறினார். மேலும் அமெரிக்க அதிபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் 99 சதவீதம் பேருக்கு அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என தெரிவித்துள்ள கருத்து குறித்து ஹானிடம் கேட்டதற்கு, அவர் அதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது எனவும்,  சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3.4 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் கடந்த மார்ச் மாதம் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் தெரிவிதுள்ளார். அதேபோல் கடந்த ஜூன் மாதம் தடுப்பூசி குறித்து தெரிவித்த உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம், வைரசுக்கு எதிரான வலுவான தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்க முடியாமல்கூட போகலாம் என கவலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

 

click me!