உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவிலும் தனது கோர முகத்தை கொரோனா காட்டி வருகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்து 478 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
உயிர்க்கொல்லி நோயாக சீன நாட்டில் உருவாகிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா நோய்க்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இதுவரை 37ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி இருக்கின்றனர். உலகம் முழுவதும் 7 லட்சத்து 68 ஆயிரத்து 466 மக்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். சீனா, இத்தாலி, ஸ்பெயின், ஈரான், அமெரிக்கா, பிரான்ஸ், இந்தியா என உலகின் 200 நாடுகளில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவிலும் தனது கோர முகத்தை கொரோனா காட்டி வருகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்து 478 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதுவரையில் மொத்தம் 1 லட்சத்து 55 ஆயிரத்து 969 பேருக்கு அமெரிக்காவில் கொரோனா நோய் இருப்பது கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 271 பேர் உயிரிழந்ததை அடுத்து அந்நாட்டில் தற்போது வரை 2 ஆயிரத்து 854 இக்கொடூர நோய்க்கு இரையாகியுள்ளனர்.
அடுத்து வரும் இருவாரங்கள் அமெரிக்காவிற்கு மிக முக்கியமானது என்றும் அந்நாட்களில் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அதிபர் ட்ரம்ப் அச்சம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வந்த போதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெருத்த அச்சமடைந்துள்ளனர். உலகத்தின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவே கொரோனா நோயால் நிலைகுலைந்து போயிருப்பதால் மற்ற நாடுகள் அனைத்தும் அதிர்ச்சியில் இருக்கின்றன.