
அமெரிக்காவின் 45-வது அதிபரைத் தேர்வு செய்யும், பொதுத்தேர்தல் அந்த நாடு முழுவதும் இன்று நடக்கிறது. இதில் வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்குள் அடுத்த 4 ஆண்டுகளுக்கு குடியேறப் போவது, ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனா?, அல்லது குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பா ? என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அதிபருக்கு நடக்கும் தேர்தலோடு சேர்த்து, 12 கவர்னர்கள் பதவிகளுக்கும், நாடாளுமன்ற மேல்சபையான செனட் சபையின் 34 இடங்களுக்கும், கீழ் சபையான பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடக்கிறது.
14 கோடி பேர்
இந்த தேர்தலில் அமெரிக்காவில் 50 மாநிலங்களில் உள்ள 14 கோடியே 63 லட்சத்து 11 ஆயிரம் பேர் வாக்களிக்க இருக்கிறார்கள். இதில் ஏற்கனவே 4 கோடி பேர் முன்கூட்டியே வாக்களிக்கும் திட்டத்தை பயன்படுத்தி வாக்களித்து விட்டனர்.
வேட்பாளர்கள்
இதில் ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனை(வயது 68) எதிர்த்து களம் காண்கிறார் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் வேட்பாளரும் தொழிலதிபருமான டொனால்ட் டிரம்ப்(வயது70). இருவரும் வேட்பாளர்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதில் இருந்து ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து பிரசாரம் செய்து வருகின்றனர்.
பின்னடைவு
அதிபர் வேட்பாளர்களுக்கு இடையிலான நேரடி விவாதத்தில் கூட டிரம்ப் மீது ஏராளமான குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும், கேள்விகளையும் முன்வைத்து ஹிலாரி திணறடித்தார்.
இதற்கு பதிலடியாக ஹிலாரி வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது, தனிப்பட்ட சர்வரில் அரசு மின் அஞ்சல்களை அனுப்பியது குறித்து விசாரணை நடத்தி வேட்பாளர் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என ஹிலாரி மீது குற்றச்சாட்டை டிரம்ப் முன் வைத்தார். இந்த குற்றச்சாட்டை தொடக்கத்தில் விசாரித்த அமெரிக்க புலனாய்வு அமைப்பு, ஆதாரங்கள் இல்லை என நிராகரித்தது. அதன்பின், கடந்த மாதம் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்போவதாக அந்த அமைப்பு அறிவித்ததால், ஹிலாரிக்கு சற்று பின்னடைவு காணப்பட்டது.
டிரம்ப் பேச்சு
அதேசமயம், தொடக்கத்தில் இருந்தே டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தில் முஸ்லிம்கள் அமெரிக்காவில் நுழைய தடைவிதிக்க வேண்டும் என்றும், மெக்சிக்கோ எல்லையில் அகதிகள் நுழையாமல் சுவர் எழுப்ப வேண்டும் என்றும், அமெரிக்காவை புகழ்பெறச்செய்வோம் என்றும் இனவெறியைத் தூண்டு வகையிலும் பேசி வருகிறார். இவரின் பேச்சு குடியரசுக்கட்சியினர் மத்தியில் ஆதரவை அதிகரித்தபோதிலும், நடுநிலை வாக்களர்கள் முகம் சுளித்தனர்.
செக்ஸ் புகார்
மேலும், கடந்த 2005-ம் ஆண்டு ஒரு தனியார் நிகழ்ச்சியில் டி.வி தொகுப்பாளர் பில்லி புஷ்சுடன் பெண்கள் குறித்து மிக மோசமாக டிரம்ப் பேசி பேச்சு அடங்கிய வீடியோவை தி வாஷிங்டன் டைம்ஸ் நாளேடு கடந்த மாதம் வெளியிட்டது. மேலும், பல பெண்கள் டிரம்ப் மீது செக்ஸ் புகார் அளித்தனர். இது டிரம்புக்கு பெண்கள் மற்றும் கட்சிக்குள் இருந்த ஆதரவை ஒட்டுமொத்தமாக குறைத்தது. இருந்தாலும், டிரம்ப் தொடர்ந்து விடாப்பிடியாக பிரசாரம் செய்து வந்தார்.
நட்சத்திர பிரசாரம்
ஹிலாரி தனக்கு பின்னடைவு ஏற்பட்ட போதெல்லாம், நட்சத்திர பாடகிகளான மடோனா, ஜெனிபர் லோபஸ், நடிகைகள் அடிலி, ஜெனிபர் அடிஸ்டன் உள்ளிட்டோரை அழைத்து நிகழ்ச்சி நடத்தி ஆதரவைப் பெருக்கினார். ஆனால், டிரம்ப் தனது குடும்பத்தினர் ஆதரவுடன் பிரசாரத்தை தொடர்ந்தார்.
இறுதிக்கட்டம்
இமெயில் விவகாரத்தில் பின்னடைவைச் சந்தித்து வந்த ஹிலாரிக்கு, உற்சாகம் ஊட்டுவதைப் போல் எப்.பி.ஐ. நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதில் ஹிலாரியின் 6.5 லட்சம் மின் அஞ்சல்களை ஆய்வு செய்ததில் அவர் மீது குற்றநடவடிக்கை எடுக்க ஆதாரங்கள் ஏதும் இல்லை என தெரிவித்து. இதனால், ஹிலாரியும், அவரின் ஆதரவாளர்களும் மகிழ்ச்சியில், ஊக்கத்துடன் நார்த் கரோலினா மாநிலத்தில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
விர்ஜினியா மாநிலம், ஐயோவா, கொலராடோ, மினியாபோலிஸ், மிச்சிகன், பென்சில்வேனியா ஆகிய நகரங்களில் டொனால்ட் டிரம்ப் நேற்று முன் தினம் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டார்.
கருத்துக்கணிப்பு
இதற்கிடையே தேர்தல் நெருங்க பல்வேறு நிறுவனங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதில் முன்னணி நிறுவனமான பைவ்தர்ட்டிஎயிட்.காம் நடத்திய கருத்துக்கணிப்பில் ஹிலாரிக்கு 65 சதவீத வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, டிரம்பைக் காட்டிலும் 4 சதவீத புள்ளிகள் முன்னிலையுடன் ஹிலாரி கருத்துத்தெரிவித்துள்ளன.
ஒட்டுமொத்தம் உள்ள 538 செனட், மற்றும் பிரதிநிதிகள் சபை எம்.பி. எண்ணிக்கையில் அதிபர் வேட்பாளராகத் தேவையான 270 உறுப்பினர்கள் ஆதரவில் ஹிலாரிக்கு 291 உறுப்பினர்கள் ஆதரவு கிடைக்கும் எனத் தெரியவந்துள்ளது. டிரம்புக்கு 245 பேரின் ஆதரவு மட்டுமே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமர்சனம்
ஆனால், கருத்துக்கணிப்புகளையும், தேர்தல் முடிவுகளையும் கூட டிரம்ப் விமர்சனம் செய்யத் தவறவில்லை. தான் தேர்தலில் வெற்றி பெற்றால் நியாயமான தேர்தல் என்றும், ஹிலாரி வென்றால், அதில் தில்லு முல்லு நடந்துள்ளது, அந்ததேர்தல் வெற்றியை ஏற்கமாட்டேன், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என பேசி அமெரிக்க ஜனநாயகத்தை ஒரு உலுக்கு உலுக்கினார்.
அதுமட்டுமல்லாமல், டிரம்பின் ஆபத்தான வெளியுறவுக்கொள்கை, அணு ஆயுதங்கள் குறித்த பார்வை, தொழிலாளர்களுக்கு எதிரான நிலைப்பாடு போன்றவைகளால் சர்வதேச பார்வையாளர்கள் டிரம்ப் அதிபராவது ஆபத்தானது என வெளிப்படையாக விமர்சனம் செய்தனர்.
முதல் பெண்
அதேசமயம், இந்த தேர்தலில் ஹிலாரி வெற்றிபெற்று அதிபராகும் பட்சத்தில் அமெரிக்க வரலாற்றில் அதிபராகும் முதல் பெண் என்ற பெருமையை அவர் பெருவார்.