ஆப்கன் தாக்குதலில் 58 பாக். வீரர்கள் பலி! காபூல் தாக்குதலுக்குப் பழி தீர்த்த தாலிபன்!

Published : Oct 12, 2025, 03:41 PM IST
Afghanistan Pakistan border clash

சுருக்கம்

காபூலில் நடந்த வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் இராணுவ முகாம்கள் மீது தாலிபன் நடத்திய தாக்குதலில் 58 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக தாலிபன் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் இராணுவ முகாம்கள் மீது தாலிபன் நடத்திய தாக்குதலில் 58 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 25 முகாம்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தாலிபன் அறிவித்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் கைப்பற்றப்பட்டது என்ற கூற்றை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.

சமீபத்தில் காபூலில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் அரசு குற்றம்சாட்டியது. இதன் தொடர்ச்சியாக, நேற்று இரவு பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள இராணுவ முகாம்கள் மீது தாலிபன் தாக்குதல் நடத்தியது. அப்போது இரு தரப்புப் படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

58 பாகிஸ்தான் வீரர்கள் பலி

இந்த நிலையில், இன்று தாலிபன் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தத் தாக்குதலில் 58 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 25 பாகிஸ்தான் இராணுவ முகாம்களைத் தங்கள் படைகள் கைப்பற்றியதாகவும் தெரிவித்தார். மேலும், இந்தச் சண்டையின்போது கூடுதலாக 30 பாகிஸ்தான் வீரர்கள் காயமடைந்தனர் என்றும் அவர் கூறினார்.

"ஆப்கானிஸ்தானின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது," என்று தெரிவித்த அவர், "எதிரிகள் மீண்டும் ஆப்கானிஸ்தானின் வான்வெளியை மீறினால், அதற்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும்," எனப் பாகிஸ்தானை எச்சரித்தார்.

பாகிஸ்தான் மறுப்பு

குனார் மற்றும் ஹெல்மண்ட் மாகாணங்கள் உட்பட, ‘டூராண்ட் கோடு’ (Durand Line) நெடுகிலும் பல இடங்களில் மோதல்கள் நடந்ததை பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். ஆனால், தாலிபன் தங்கள் முகாம்களைக் கைப்பற்றியதாகக் கூறும் கூற்றை அவர்கள் முற்றிலும் நிராகரித்தனர்.

இந்தத் தாக்குதலில் பீரங்கிகள் மற்றும் வான்வழி ஆயுதங்களையும் பயன்படுத்தியதாகப் பாகிஸ்தான் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், உயிரிழப்புகள் குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

தாலிபன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி இந்தியாவுக்கு வருகை தந்துள்ள நிலையில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?
இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!