
விமான டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண் அல்லது பான் கார்டு எண் ஆகியவற்றை கட்டாயமாக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான முறைப்படியான அறிவிப்பு அடுத்த 3 மாதங்களுக்குள் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “ அடுத்த 90 அல்லது 120 நாட்கள் பின்பு விமான டிக்கெட் முன்பதிவை ரொம்ப எளிதாக செய்து விட முடியாது.
விமான டிக்கெட் முன்பதிவின்போது ஆதார் எண் அல்லது பான் கார்டு எண் கட்டாயகமாக தெரிவிக்க வேண்டும். எந்த அடையாள அட்டையின் கீழ் அதிகமாக மக்கள் வருகிறார்கள் என்பதை கூர்ந்து கவனித்து வருகிறோம்.
இந்த திட்டத்தை டிஜிட்டல் முறையில் நிறைவேற்றுவதற்காக ஒரு குழுவை அமைத்து அரசு செயல்பட்டு வருகிறது.
அந்த குழு பல்வேறு ஆலோசனைகளை அளித்துள்ளது. அந்த குழுவினர் இன்னும் ஒரு மாதத்தில் அறிக்கை அளிப்பார்கள் அதன்பின், அனைத்து விமான நிறுவனத் தலைவர்களிடம் விவாதித்து, இறுதி முடிவு எடுக்கப்படும்.
இந்த திட்டம் குறித்து மக்களின் கருத்துக்களை அறிய இணையதளத்தில் வெளியிடப்படும் அவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் முடிவு வெளியிடப்படும். விமான நிலையத்தில் ஒருவரும் தங்களின் அடையாத்தை பதிவு செய்துவிடாமல் யாரும் நுழைந்துவிடக்கூடாது” எனத் தெரிவித்தார்.