வடகொரியாவில் 60 அணுகுண்டுகள், 5 ஆயிரம் டன் ரசாயன ஆயுதங்கள்..!! பென்டகன் வெளியிட்ட அதிரிச்சி ரிப்போர்ட்..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 19, 2020, 7:21 AM IST
Highlights

வடகொரியாவில் சுமார் 60 அணுகுண்டுகள் மற்றும் 5 ஆயிரம் டன் ரசாயன ஆயுதங்கள் உள்ளதாகவும், உலகின் மூன்றாவது பெரிய அணு ஆயுத நாடு இது என்றும் அமெரிக்க ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வடகொரியாவில் சுமார் 60 அணுகுண்டுகள் மற்றும் 5 ஆயிரம் டன் ரசாயன ஆயுதங்கள் உள்ளதாகவும், உலகின் மூன்றாவது பெரிய அணு ஆயுத நாடு இது என்றும் அமெரிக்க ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. வடகொரியாவின் அபாயங்கள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில்,  இந்த அதிர்ச்சிகர தகவல்கள்  இடம்பெற்றுள்ளன.

உலகின் இரு எதிரெதிர் துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங்  உன்னும் கடந்தாண்டு மே மாதம் முதல் முறையாக சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். அப்போது வடகொரியாவை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவது தொடர்பாக, இரு நாடுகளுக்கும் இடையே அணு ஆயுதப் பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிட்டுச் சொல்லும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை, இதனால் ட்ரம்ப்- கிம் ஜாங் உன்னும், இரண்டாவது முறையாக கடந்த பிப்ரவரி மாதம் வியட்நாமில் சந்தித்து பேசினர். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தை எதிர்பாராதவிதமாக தோல்வியில் முடிந்தது. இருநாடுகளுக்கும் இடையிலான அணுஆயுத பேச்சுவார்த்தை அத்துடன் முடங்கிப் போனது. இந்தச் சூழ்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் கடந்த ஜூன் மாதம் வடகொரியாவுக்கே நேரில் சென்று கிம் ஜாங் உன்னை சந்தித்தார் ட்ரம்ப். 

அப்போது முடங்கிப்போன அணு ஆயுத பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது என இருநாட்டு தலைவர்களும் உறுதி பூண்டனர். இதற்கிடையில் வடகொரியாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா மற்றும் தென் கொரிய படைகள், எல்லையில் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டன. இதனால் கோபமடைந்த வடகொரியா, அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை எச்சரிக்கும் வகையில் தொடர்ச்சியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவி சோதித்தது. இதனால் அமெரிக்க மற்றும் வட கொரியா இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. ஆனால் வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளால் இருதரப்பு பேச்சு வார்த்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அமெரிக்கா கூறியது. ஆனால் வட கொரியா, அமெரிக்கா தனது விரோதப் போக்கை மாற்றிக் கொள்ளும் வரை அணு ஆயுத பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இருக்காது என கூறியது. அதேபோல் குறிப்பிடத்தக்க பொருளாதார தடைகளை நீக்கும் வகையில் புதிய ஒப்பந்தத்தை இந்த ஆண்டின் இறுதிக்குள் கொண்டுவர அமெரிக்காவுக்கு வடகொரியா கெடுவிதித்தது. 

அமெரிக்கா அப்படி செய்யாவிட்டால் வடகொரியா புதிய பாதையை கடைப்பிடிக்கும் என அந்நாடு பகிரங்க எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சுவார்த்தைக்கான கதவை மூடுவதாக வடகொரியா அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே பகை நீறுபூத்த நெருப்பாக இருந்து வரும் நிலையில், அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அதிர்ச்சியூட்டும் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.  அதில் கூறப்பட்டுள்ளதாவது:-  வடகொரியாவில் சுமார் 60 அணுகுண்டுகள் உள்ளன,  கிட்டத்தட்ட 5 ஆயிரம் டன் ரசாயன  ஆயுதங்களை அது பதுக்கி வைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 புதிய குண்டுகளை அது உருவாக்குகிறது, அதனிடம் 20 வெவ்வேறு வகையான 2500 முதல் 5 ஆயிரம் டன் ரசாயன ஆயுதங்கள் உள்ளன. அதேபோல் வடகொரியா தனது பீரங்கிகளில் ரசாயன தோட்டாக்களை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.

உயிரியல் ஆயுதங்கள் குறித்து வடகொரிய ஆராய்ச்சி செய்து வருகிறது.  அதிலும் குறிப்பாக தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய ஆயுதங்களாக ஆந்த்ராக்ஸ் மற்றும் பெரியம்மை நோய்களை உருவாக்கும் கொடிய ரசாயன குண்டுகளை வடகொரியா தயாராக வைத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!