
கொலம்பியாவின் தலைநகரான பொகோட்டாவில் ஞாயிற்றுக்கிழமை, சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆகப் பதிவானது என ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) கூறியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் உருவானது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது தலைநகரில் கட்டிடங்கள் குலுங்கின. நகரம் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன என GFZ அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் கூறியுள்ளனர்.
AFP வெளியிட்ட அறிக்கையின்படி, பொகோட்டா நகருக்கு 170 கிலோமீட்டர் தொலைவில், உள்ளூர் நேரப்படி காலை 9:08 மணிக்கு நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) கூறியுள்ளது.
மக்கள் மத்தியில் அச்சம்:
6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கொலம்பியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், மக்கள் பாதுகாப்பு தேடி சாலைகளுக்கு விரைந்தனர். கட்டிடங்கள் ஆடுவதைக் காட்டும் வீடியோக்களை சிலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
பொகோட்டாவில் நிருபர்களிடம் பேசிய ஒரு மூதாட்டி, "இது மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது" என்று கூறினார்.
நிலநடுக்க மண்டலம் மற்றும் கடந்த கால சம்பவங்கள்:
மத்திய கொலம்பியா ஒரு தீவிர நில நடுக்க மண்டலம் ஆகும். முன்னதாக 1999 ஆம் ஆண்டில், அன்செர்மானுவேவோ பகுதிக்கு அருகில் ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சுமார் 1,200 உயிர்களைப் பலிகொண்டது.
அதே நாளில் அதிபர் வேட்பாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இந்த நிலநடுக்கம் நாட்டு மக்களுக்கு மேலும் ஒரு கவலையை ஏற்படுத்தியுள்ளது.