போர் குற்றங்கள் எதையும் ரஷ்யா மேற்கொள்ளவில்லை என்றும், உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கை தான் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் ரஷ்யா தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 287 குழந்தைகள் கொல்லப்பட்டு இருக்கின்றனர் என உக்ரைன் குற்றம்சாட்டி உள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி போர் அறிவிப்பை வெளியிட்ட ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. அதன்படி ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரில் இதுவரை 287 குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்றும் 492 பேருக்கு கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளன என்று உக்ரைன் தெரிவித்து உள்ளது.
எண்ணிக்கை உறுதி செய்யப்படவில்லை:
“குற்ற சம்பவங்களை பதிவு செய்ய தொடங்கியது முதல், ரஷ்யாவின் கொடூர தாக்குதலில் சிக்கி மரியுபொல் நகரின் டோநெக் பகுதியில் 24 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இறுதி செய்யப்படாதவை ஆகும். தற்காலிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டை இன்னும் நிறைவு செய்யப்படவில்லை,” என்று உக்ரைன் தெரிவித்து இருக்கிறது.
உக்ரைனின் மரியுபோல் நகரின் சுகாதார அமைப்புகள் சீர்குலைந்து விட்டன. சாலைகள் எங்கிலும் பிணங்கள் இருப்பதால் காலரா நோய் பரவும் அபாயம் அதிகரித்து இருக்கிறது என்று மரியுபோல் நகர மேயர் தெரிவித்து இருக்கிறார்.
சிறப்பு ராணுவ நடவடிக்கை:
சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழப்பு அதிகரித்து வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், பொது மக்கள் மற்றும் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றே ரஷ்யா கூறி வருகிறது. மேலும் போர் குற்றங்கள் எதையும் ரஷ்யா மேற்கொள்ளவில்லை என்றும், உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கை தான் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் ரஷ்யா தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது.
முன்னதாக ஜூன் மாத வாக்கில், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரில் சிக்கி இதுவரை 250-க்கும் அதிக குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தகவல் தெரிவித்து இருந்தது. மேலும் உக்ரைன் நாட்டில் ஐம்பது லட்சம் பேர் வன்முறை மற்றும் தாக்குதலில் சிக்கும் அபாயத்தில் உள்ளனர் என்றும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.