2021-ஆம் ஆண்டில் ஏற்பட்ட முக்கியமான 5 இயற்கைப் பேரிடர்களில் 3 பேரிடர்கள் ஐரோப்பிய நாடுகளே உள்ளன. இந்த ஐந்தில் ஆசிய நாடுகள் எதுவும் இடம் பெறவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் இயற்கைப் பேரிடர்கள் நடப்பது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் உலக அளவில் 2021- ஆம் ஆண்டில் ஏற்பட்ட சில முக்கிய இயற்கைப் பேரிடர்கள் என்னென்ன?
அமெரிக்கப் புரட்டிப்போட்ட புயல்
undefined
அமெரிக்காவில் இடா சூறாவளி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க கிழக்கு கடற்கரையைப் பதம் பார்த்தது. இது அமெரிக்க கண்டத்தை தாக்கிய மிக வலிமையான சூறாவளியாகப் பதிவாகியிருக்கிறது. இந்தச் சூறாவளியில் சுமார் 45 பேர் உயிரிழந்தனர். சூறாவளியால் மிஸிஸிப்பி மாகாணம் முழுவதுமே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், அந்த மாகாணமே இருளில் மூழ்கியது.
கடனாவின் வெப்ப அலை
ஜூன் மாதம் கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடும் வெப்ப அலை ஏற்பட்டது. 5 நாட்களுக்கு நீடித்த கடும் வெப்ப அலை காரணமாக சுமார் 569 பேர் உயிரிழந்தனர். கனடாவில் வரலாறு காணாத வகையில் வெப்ப நிலையும் உயர்ந்தது. கால நிலை மாற்றம் காரணமாகவே கடும் வெப்ப அலை ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
இத்தாலியின் பெரும் தீ
தெற்கு இத்தாலியில் ஏற்பட்ட வெப்ப காற்றால் சிசிலி நகரமும் கடந்த ஆகஸ்ட் மாதம் தீப்பிடித்து எரிந்தது. இதனால், நகரமே பெரும் பாதிப்புக்குள்ளானது. தீயை அணைக்கும் பணியில் அந்த பிராந்தியத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு வீரர்களும் களமிறக்கிவிடப்பட்டனர். இந்தப் பயங்கர தீ விபத்தால் உயிரிழப்புகள் ஏற்படவில்லையென்றாலும், ஐரோப்பாவில் வெப்பநிலை 48.8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்தது. ஐரோப்பிய வரலாற்றில் இது மிக உயர்ந்த வெப்பநிலையாகக் கருதப்படுகிறது.
கிரீஸ் தீயின் கோரம்
இத்தாலியைப் போலவே கிரீஸ் நாடு காட்டுத் தீயால் கடும் பாதிப்புக்குள்ளானது. இந்தக் காட்டுத் தீயால் சுமார் 600 இடங்களில் தீ பரவியது. கிரீஸ் நாட்டின் இரண்டாவது பெரிய தீவான ஈவியா இந்த விபத்தால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. காட்டு தீ காரணமாக இயற்கையான காடுகள் அழிந்தன.
ஜெர்மனியின் வெள்ளம்
வெள்ளம் ஏற்படுவது என்பது உலகில் சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆனால், மேற்கு ஜெர்மனியில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த மிக கன மழையால் ஜூலை மாதம் கடும் வெள்ளம் ஏற்பட்டது. ஜெர்மனியில் தாழ்வான நகரங்களும் பகுதிகளும் பெரும் பாதிப்பைக் கண்டன. கடுமையான வெள்ளத்தால் ஜெர்மனியில்170 பேர் இறந்தனர். சுமார் 1 லட்சம் பேர் தண்ணீர், மின்சாரம் போன்ற வசதிகள் இல்லாமல் பாதிப்பை சந்தித்தனர். நகரங்களின் உள்கட்டமைப்பும், தொலைத்தொடர்பு கட்டமைப்புகளும் கடுமையாக சேதமடைந்தன. இவற்றையெல்லாம் சீர் செய்யவே பல வாரங்கள் ஆயின.