டெல்டாவும் ஒமைக்ரானும் உலகிற்கு இரட்டை அச்சுறுத்தல்கள் எனவும் அவை பாதிப்பு எண்ணிக்கையை சுனாமி வேகத்தில் அதிகரிக்க செய்துவிடும் என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜெனிவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது இந்த எச்சரிக்கை விடுத்த அவர், அதிவேக பரவல் தன்மை கொண்ட அந்த வைரஸ்கள் தற்போது உலகம் முழுவதும் பரவி வருவதாக அவர் தெரிவித்தார். மேலும் ஏற்றதாழ்வுயற்ற தடுப்பூசி பயன்பாட்டிற்கு மீண்டும் அழைப்பு விடுத்த அவர்,கொரோனா பரவலை கட்டுபடுத்தும் விதிமுறைகளை கடுமையாக பின்பற்றவேண்டும் என்றும் அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்.
உலக சுகாதார அமைப்பு மார்ச் 2020 யில் கொரோனாவை தொற்றுநோயாக அறிவித்ததிலிருந்து தற்போதைய பரவல் புள்ளிவிவரங்கள் மிக உயர்ந்தவை, இது ஓமிக்ரான் பரிமாற்றத்தின் அதிவேகத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதனால் தொடர்ந்து ஒய்வின்றி உழைக்கும் சுகாதார ஊழியர்கள் மற்றும் போதிய மருத்துவ வசதி இல்லாத சுகாதார அமைப்புகள் பெரும் சவாலை சந்திக்க நேரிடும் என்று அவர் தெரிவித்தார். டெல்டா மற்றும் ஒமைக்ரான் பரவல் இரண்டாவது முறையாக புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்த முடியாத சூழல் நிலவுகிறது.
undefined
கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து மெல்ல மெல்ல அதிகரித்து வந்த கரோனா தொற்று, ஒமைக்ரான் கண்டறியப்பட்டபின், பரவலில் வேகமெடுத்துள்ளது. உலக அளவில் டிசம்பர் 20 முதல் 26-ம் தேதிவரை 49.90 லட்சம் பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் மட்டும் இந்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். அதாவது 28.40 லட்சம் பேர் ஐரோப்பிய நாடுகளில் பாதிக்கப்பட்டனர். இந்த பாதிப்பு எண்ணிகை முந்தைய வார நிலவரத்தை விட 3% அதிகமாகும். ஐரோப்பிய நாடுகளில் சராசரியாக ஒரு லட்சம் பேருக்கு 304 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தனது வாராந்திர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே இந்தியாவில் ஒட்டுமொத்த ஒமைக்ரான் பாதிப்பு 961 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக தலைநகர் டெல்லில் 263 பேருக்கு இதுவரை ஒமைக்ரான் தொறு உறுதியாகி இருக்கிறது. மகாராஷ்டிராவில் 252, குஜராத் 97, ராஜஸ்தான் 69, கேரளா 65, தெலங்கானா 62, தமிழ்நாடு 45, கர்நாடகா 34, ஆந்திரா 16, ஹரியானா 12, மேற்கு வங்கம் 11, மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா ஒன்பது பேரும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் உத்தரகண்ட் 4, சண்டிகர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் தலா 3, உத்தரபிரதேசம் 2, கோவா, ஹிமாச்சல், லடாக் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. புதிதாக பஞ்சாப்பிலும் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதியானதால் ஒமைக்ரான் தொற்று பரவிய மாநிலங்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
தலைநகர் டெல்லி, வர்த்தக தலைநகரமான மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் வகை பரவல் அதிக எண்ணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நாட்டிலேயே அதிகமாக டெல்லியில் கொரோனா தொற்று அதிகரிப்பதால், அங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. அதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டுள்ளன. பேருந்து, ரயில், மெட்ரோ ரயில்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.