தெற்கு மெக்சிகோ பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
மெக்சிகோவை புரட்டி எடுத்த அகாதா சூறாவளியில் சிக்கி பத்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருபதுக்கும் அதிகமானோர் காணாமல் போனதாக தகவல் வெளியாகி உள்ளது. தெற்கு மெக்சிகோ பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
பசிபிக் காலக்கட்டத்தில் முதல் சூறாவளியாக இது அமைந்து உள்ளது. இதன் காரணமாக மெக்சிகோவின் பசிபிக் பகுதியில் நிலச் சரிவு ஏற்பட்டது. 1949 ஆண்டு முதல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய சூறாவளியாக இது மாறி இருக்கிறது என அமெரிக்க தேசிய சூறாவளி மையம் தெரிவித்து உள்ளது. அகாதா புயல் தீவிரம் இழந்ததை அடுத்து வெராகுஸ் மாநிலத்தில் மழை குறைய தொடங்கி இருக்கிறது.
“தற்போது இருபதுக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். பெரும்பாலானோர் மலைப் பகுதியில் உள்ளனர். சூறாவளியில் சிக்கி இதுவரை பத்து பேர் உயிரிழந்துள்ளனர். அகாதா காரணமாக நிலச் சரிவு ஏற்பட்ட போது உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் செவ்வாய் கிழமை காலை பெய்த பலத்த மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது,” என ஆக்ஸ்கா மாநில ஆளுநர் அலெஜாண்ட்ரோ முரட் தெரிவித்தார்.
அகாதா சூறாவளி காரணமாக ஆக்ஸ்கா பகுதியை அடுத்த போர்ட்டோ ஏஞ்சலில் நிலச்சரிவு ஏற்பட்டதோடு, மணிக்கு 165 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. மெக்சிகோவில் இருபுறமும் பசிபிக் மற்றும் அட்லாண்டிக் கடல் பகுதிகளால் சூழப்பட்டு இருப்பதால் அடிக்கடி கனமழை மற்றும் சூறாவளி ஏற்படுவது வாடிக்கையான ஒன்று தான். இது போன்ற பாதிப்புகள் மே முதல் நவம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் அதிகளவு ஏற்படும்.
கடந்த ஆண்டு மெக்சிகோவை தாக்கிய புயல், மூன்றாம் பிரிவு சூறாவளியான கிரேஸ் ஆகும். இதில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் வெராக்ருஸ் மற்றும் பியூப்லா பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த சூறாவளி ஆகஸ்ட் மாத வாக்கில் தாக்கியது.