’தனிமையில் அலைபவனின் கைகளைப் பிடித்து பேசத் தெரியாமுண்டங்கள் நாம்'...கொலை செய்தாரா எழுத்தாளர் ஃப்ரான்சிஸ் கிருபா?...

By Muthurama LingamFirst Published May 6, 2019, 2:47 PM IST
Highlights

’கன்னி’ என்ற விருதுபெற்ற நாவலையும் ‘மல்லிகைக் கிழமைகள்’,’ஏழுவால் நட்சத்திரம்’ உட்பட சில கவிதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ள ஃபிரான்சிஸ் கிருபா இன்று நண்பகல் ஒரு கொலை வழக்கு தொடர்பாக கோயம்பேடு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

’கன்னி’ என்ற விருதுபெற்ற நாவலையும் ‘மல்லிகைக் கிழமைகள்’,’ஏழுவால் நட்சத்திரம்’ உட்பட சில கவிதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ள ஃபிரான்சிஸ் கிருபா இன்று நண்பகல் ஒரு கொலை வழக்கு தொடர்பாக கோயம்பேடு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீப காலமாக மனநலம் பாதிக்கப்பட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இவர் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி வந்த ஒருவருக்கும் இவருக்கும் கைகலப்பு ஏற்பட்டதாகவும், அதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.

பிணத்தை கைப்பற்றிய காவல் துறையினர் அருகிலேயே அமர்ந்திருந்த பிரான்சிஸ் கிருபாவை கைது செய்தனர். அப்போது அவர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது என்கிறது ஒரு நாளிதழ் செய்தி.

இவரது கைது குறித்து முகநூலில் பலரும் பல கோணங்களில் எழுதிவரும் நிலையில் மூன்று பதிவுகள் மட்டும் உங்கள் பார்வைக்கு...

...வலிப்பு காரணமாக கீழே விழுந்து அடிப்பட்டு துடித்துக் கொண்டிருந்தவரைக் கண்டு பதறி தன் மடியில் வைத்து பிரான்சிஸ் கிருபா அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சித்திருக்கிறார். சற்று நேரத்துக்கு முன் சிசிடிவி கேமராவை பார்த்து காவல்துறையினர் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக இப்போது தகவல் கிடைத்திருக்கிறது. #இதுவும்உறுதிசெய்யப்படாதது. 
#தயவுசெய்துஅமைதிகாக்கவும்...-கே.என்.சிவராமன்.

கன்னி நாவலாசிரியரும், கவிஞருமான ஃபிரான்சிஸ் கிருபா ஒரு குற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகளை சிலர் பகிர்ந்துள்ளனர்.
முதலில் ஃபிரான்சிஸ் கிருபாவுடன் யார் தொடர்பில் இருக்கிறார்கள்; நிகழ்ந்த சம்பவம் என்ன; சந்தேகத்தின் பேரில் கைதா; சாட்சியங்கள் இருக்கின்றனவா என்பதையெல்லாம் விசாரிக்கவேண்டும். அவருக்குக் கிடைக்க வேண்டிய சட்டரீதியான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

அவர் சுயமிழந்து, போதமின்றி இந்த குற்றச்செயல் புரிந்திருந்தால் அதற்குரிய விதத்தில் நடத்தப்பட வேண்டும். அவர் மிகச்சிறந்த எழுத்தாளர் என்பதால் சட்டம் சலுகைகள் காட்டவேண்டியதில்லை.

ஆனால் எழுத்தாளர்கள் சற்றே பொருத்திருந்து அவர்கள் கருத்துக்களை எழுதவேண்டும். தர்ம அடி மனோபாவத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை எழுத்துலகம் தன்னையே கேவலப்படுத்திக்கொள்ளக் கூடாது. -ராஜன்குரை கிருஷ்ணன்.

ஒருவர் செய்யும் தவறுகளுக்கு அவர் மட்டுமே பொறுப்பல்ல.இந்த சமூகமும் தான் பொறுப்பு. அச்சமூகம் என்பது நீங்களும் நானும் தான். ஒரு எழுத்தாளனை பிச்சைக்காரனாக அலையவிட்ட பாவத்தில் நம் எல்லோருக்கும் பங்குள்ளது.

தனிமையில் அலைபவனின் கைகளைப் பிடித்து பேசத் தெரியாமுண்டங்கள் நாம். பசியோடு திரிபவனுக்கு தண்ணீர் கொடுக்க மறுத்தவர்கள் நாம் என்பதையும் மறக்க வேண்டாம்.ஃபிரான்சிஸ் கிருபா செய்தியை முகநூலில் நிரப்ப வேண்டாம் நண்பர்களே...- நாச்சியாள் சுகந்தி.

click me!