கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்
சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யுடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி (சிஇஓ) சங்கர். இவர் தனது நேர்காணல் ஒன்றில், காவல் துறை உயர்அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகப் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, கோவை மாநகர சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் அடிப்படையில், ஐபிசி பிரிவுகள் 294-பி (தகாத வார்த்தைகளில் பேசுதல்), 509 (பெண்களை அவதூறாகப் பேசுதல்), 353 (அரசு ஊழியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 பிரிவு 67 (தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் சவுக்கு சங்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக, தேனி மாவட்டம் பூதிப்புரத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். தேனியில் சவுக்கு சங்கரை கைது செய்தபோது, அவருடன் இருந்த இருவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, சவுக்கு சங்கரின் காரில் இருந்த அரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக தனியாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தடையில்லா மின்சாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி!
தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் கோவை நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளனர். இந்த வழக்கு, வருகிற 9ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், தனக்கு ஜாமீன் கோரி சவுக்கு சங்கர் தாக்கல் செய்த வழக்கும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், யூடியூபர் சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்ததாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த மகேந்திரன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.