
மதுரை,
பணப் பரிவர்த்தனைகளை வங்கி மூலம் செய்யும்போது உரிய பாதுகாப்பு கிடைக்கின்றது. எனவே, தொழிலாளர்கள் அனைவரும் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ் கூறினார்.
மதுரை வடமலையான் மருத்துவமனையில் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் பணியாளர்களுக்கு புதிய வங்கி கணக்கு தொடங்குதல் மற்றும் ஆதார் எண் இணைப்பு தொடர்பான சிறப்பு முகாம் நடைப்பெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தொடங்கி வைத்தார்.
“மதுரை மாவட்டத்தின் மக்கள் தொகை 34 இலட்சம். இவர்களில் இதுவரை 99 சதவிகிதம் பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. இடம் பெயர்வோருக்கு ஆதார் எண் வழங்கிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மாவட்டத்தில் உள்ள 420 ஊராட்சிகளில் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் உறுப்பினராக உள்ளனர்.
மாதாந்திர முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் உள்ளிட்ட ஓய்வூதியம் பெறுவோர் 1 இலட்சத்து 30 ஆயிரம் பேர் உள்ளனர்.
மேலும், ஊரக நகர்ப்பகுதிகளில் உள்ள பல்வேறு சுயஉதவிக்குழுவினர் உள்ளிட்ட அனைவரும் தங்களது பணப் பரிவர்த்தனைகளை வங்கி மூலம் செய்யும்போது உரிய பாதுகாப்பு கிடைக்கின்றது.
தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கப்பெறும் பயன்களை முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது. எனவே, தொழிலாளர்கள் அனைவரும் வங்கி கணக்கு தொடங்கி, ஆதார் எண்ணை இணைத்து கொள்ள முன்வர வேண்டும்” என்று மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்தார்.
இதில் வடமலையான் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் புகழகிரி, தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் சரவணன், துணை ஆணையர் ராதாகிருஷ்ண பாண்டியன், உதவி ஆணையர் கோவிந்தன், தொழிலாளர் ஆய்வாளர் சாந்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இருளப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.